Published on 23/02/2022 | Edited on 23/02/2022
தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீன் கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மேலும் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் முறைகேடுகளை தடுக்கக்கோரி ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.