திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் புதிய கட்டடப் பணிகள் ஆய்வு மேற்கொண்டு கட்டடத்தின் அமைப்பு குறித்த வரைபடத்தைப் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவத்துறை சார்ந்த கூடுதல் கட்டடங்கள் கட்டி வரும் பணிகளுக்கு மருத்துவத் துறையில் எப்போதும் இல்லாத அளவுக்கு 119.26 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தற்போது பரவி வரும் ஜே.என் 1 என்ற கொரோனா வைரஸால் எந்த விதமான பாதிப்பும் கிடையாது. இருந்தபோதிலும் 20% பாதிப்புகள் இருக்கக்கூடிய நிலையில் அரசு முன்னெச்சரிக்கையுடன் தயாராக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்றார்.