நமக்கு தெரியாமலேயே நம்மை வீடியோ எடுக்க தொடங்கி விட்ட போலீசார். ஆம் ஈரோட்டில் இன்று நடந்த நிகழ்ச்சியில் இது பற்றி ஈரோடு மாவட்ட காவல் துறை கூறியிருப்பதாவது. ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் 30 Body Worn Camera வாங்கப்பட்டு அதில் 15 கேமராக்கள் சட்டம் ஒழுங்கு காவலர்களுக்கும், 15 கேமராக்கள் போக்குவரத்து காவலர்களுக்கும் இன்று 30.04.2019 ம் தேதி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.சக்திகணேசன், மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இக்கேமராவினை கையாளுவது குறித்து காவலர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. பணியில் இருக்கும் காவலர்கள் அங்கு நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் இந்த கேமரா மூலம் தானாக பதிவு செய்ய முடியும். இதன் மூலம் ஊர்வலங்கள், பேராட்டங்கள், போக்குவரத்து பணிகள் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க முடியும்.
எந்த ஒரு நகழ்வுகளின்போதும் உண்மை தன்மையை கண்டறிய ஒரு சான்றாக இக்கேமரா உதவும். மேலும், சில நிகழ்வுகளில் இக்கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் நீதிமன்றங்களில் ஆதாரமாக காவல் துறை சார்பில் தாக்கல் செய்ய உதவிகரமாக இருக்கும். இன்னும் ஒரு வார காலத்திற்குள் இத்திட்டம் மாவட்டம் முழுக்க நடைமுறைப்படுத்தப்படும். ஈரோடு நகர உட்கோட்டத்தில் உள்ள ஈரோடு நகரம், ஈரோடு தெற்கு, ஈரோடு வடக்கு, கருங்கல்பாளையம், ஈரோடு தாலுக்கா மற்றும் ஈரோடு நகர போக்குவரத்து காவல் நிலையங்களில் முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு 30 காவலர்கள் 24 மணி நேரமும் கேமராவுடன் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காவலர்களை கண்காணிக்க காவல் கட்டுப்பாட்டு அறையில் அதற்கென்று தனி மானிட்டர், live tracking, live streaming ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் 200 கேமராக்கள் வாங்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கப்பட உள்ளது இவ்வாறு ஈரோடு மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. இது ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுக்க நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. போலீசார் நெஞ்சில் கட்டப்பட்டு தானாக ஓடும் கேமராவால் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படும் ஒருவர் அனுமதி இல்லாமலேயே அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அது வீடியோவாக பதிவதும் அந்தப் பதிவை கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்களும் பார்க்கலாம் என்பதும் சட்டப்படி சரியானதுதானா? என்பதை யோசிக்க வைக்கிறது. என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.