மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்தை நக்கீரன் வாயிலாக சந்தித்தோம். அப்போது அவர், தி.மு.க. உடனான சி.பி.எம்.-ன் உறவு குறித்தும் 2026 சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க. உடன் கூட்டணி தொடருமா? என்பது குறித்தும் தனது கருத்துகளை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
மத்தியில் பா.ஜ.க. மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்திருக்கிறது. மக்களவையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அவர்களின் மதவாத மற்றும் வகுப்புவாத நடவடிக்கையில் எந்த குறையும் வைக்காமல் செய்து வருகிறனர். அதோடு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாகுபாடான அணுகுமுறையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். மேலும் நேரடியாக ஆட்சி நடத்த முடியவில்லையென்று ஆளுநர் மூலமாகப் போட்டி அரசங்கத்தை நடத்தி வருவதோடு அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் பா.ஜ.க.வை எதிர்க்கும் போராட்டத்தில் தி.மு.க.-வின் பங்களிப்பு மிக முக்கியமானது. தி.மு.க. இல்லாமல் பா.ஜ.க.வின் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழகத்தை நிலைநிறுத்துவது சாத்தியமற்றது. அந்த வகையில் பா.ஜ.க-வுக்கு எதிரான போராட்டத்தில் தி.மு.க. உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இணைந்து நிற்கிறது. அதே நேரத்தில் தி.மு.க. தமிழ்நாட்டில் உழைக்கும் மக்களுக்கும் விரோதமாக செயல்படுவதையும் பல தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் இருக்கின்றனர். அதில் சிலவற்றை மட்டும்தான் நிறைவேற்றி இருக்கிறார்கள். மீதி இருக்கும் தேர்தல் வாக்குறுதிகளை எஞ்சி இருக்கும் காலங்களில் நிறைவேற்றுவார்களா என தெரியவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அதனை நிறைவேற்றினால்தான் வருகிற 2026 தேர்தல் நல்லபடியாக அமையும். இல்லையென்றால் மக்களுடைய அதிருப்தி தி.மு.க.-வுக்கு எதிராக இருக்கும். எனவே கொடுத்வாக்குறுதியை 100 % நிறைவேற்ற வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.
தி.மு.க.-வின் செயல்பாடுகளை பொறுத்தவரை பா.ஜ.க.-வின் நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் பொருளாதார கொள்கையை பொறுத்தவரை பா.ஜ.க. கடைபிடிக்கும் அதே நவ தாராளமய கொள்கையை கடைப்பிடிக்கிறார்கள். அதனுடைய விளைவாக நிரந்தர பணிகளுக்கு ஆள் இல்லாமல் இருப்பது, வெளி முகங்களுக்கு விடுவது, காண்ட்ராக்ட் விடுவது, தொகுப்பு மற்றும் மதிப்பு ஊதியத்தில் ஆள் எடுப்பது போன்ற நிலை நிழவுகிறது. நிரந்தர பணிகள் சில ஆயிரம் பேருக்கு ஏற்படுத்திக் கொடுத்தாக சில புள்ளி விவரங்கள் கொடுத்துள்ளார்கள். ஆனால் அதற்கும் காலி பணியிடங்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. அதில் பெரிய இடைவெளி இருக்கிறது. அதனுடைய ஒரு பகுதிதான் சாம்சங் நிறுவன ஊழியர்கள் பிரச்சனை. அந்திய முதலாளிகள் இங்கு வருவதிலும் அவர்கள் தொழில் தொடங்குவதிலும் எங்களுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. ஏனென்றால் இப்போது இருக்கும் உலகமய சூழலில் அது தவிர்க்க முடியாதது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புரிந்துகொண்டிருக்கிறது. அதே நேரத்தில் வரும் முதலாளிகள் யாராக இருந்தாலும் இந்தியாவின் தொழிற்சங்க சட்டங்களையும் தொழிலாளர் சட்டங்களையும் மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதை அந்தந்த மாநில, அரசாங்கங்கள் உறுதிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் தொழிலாளர்கள் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கும் பொருளாதார இழப்புக்கும் ஆளாவார்கள். நாங்கள் முதலாளிகள் வருவதை எதிர்க்கவில்லை. வரும் முதலாளிகள் தொழிலாளர்களை மதித்து நடக்க வேண்டும் என அரசு சொல்வதில் என்ன கஷ்டம் இருக்கிறது? எனவே தொழிலாளர்கள் பாதுகாப்பு, புதிய வேலைவாய்ப்பு உறுதிபடுத்த வேண்டும். சங்கம் சேர்வது என்பது அடிப்படை உரிமை. சங்கத்தைப் பதிவு செய்வது அரசு மற்றும் தொழிலாளர் நலத்தின் கடமை. அந்த கடமையைச் செய்யாததால்தான் அந்த போராட்டம் வெடித்தது. இந்த விவகாரத்தில் ஒரு கட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு முத்தரப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்தது இப்போது அங்குள்ள ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைத்துள்ளது. முதலமைச்சரின் இந்த முன்முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால் அதற்காக நாங்கள் கொடுத்திருக்கும் விலை அதிகம்.
தி.மு.க தேர்தல் காலத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதை ஏற்க முடியாது. காவல்துறையின் அணுகுமுறையும் அடக்குமுறையும் நிறுத்தப்பட வேண்டும். மக்கள் தங்கள் உணர்வுகளைப் போராட்டமாக வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். இது போன்ற விஷயங்களில் தி.மு.க. தனது கொள்கைகளிலும் அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள். அந்த மாற்றம் ஏற்படுவதும் அதனால் வரும் சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் முதல்வரை நேரடியாக சந்தித்து வலியுறுத்த முடிவு செய்திருக்கிறோம். சி.பி.எம்-க்கும் தி.மு.க.-வுக்கும் பெரிய முரண்பாடு இருப்பதைப் போலவும் அணி சேர்க்கையில் மாற்றம் ஏற்படும் என்பதைப்போலவும் ஒரு சர்ச்சை தமிழ்நாட்டில் கிளம்பியுள்ளது. அது எங்களுடைய பிரச்சனை கிடையாது. எங்களுடைய கோரிக்கை மற்றும் வெளிப்படுத்திய உணர்கள் நான் சொன்னது அடிப்படையிலானது தான். நாங்கள் இதுபோன்ற கேள்வி எழுப்புவதை தோழமைக்கு இலக்கணமா? என்று கேட்கிறார்கள். தோழமையாக இருப்பதால்தான் இதுபோன்று சொல்லிவருகிறோம். எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் அணுகுமுறை வேறு மாதிரி இருந்திருக்கும். முதலமைச்சரைச் சந்தித்து பேச உள்ளதாகத் தெரிவித்திருக்கிறோம். இது தோழமை தொடர்வதால்தான். தோழமை தொடரவில்லை என்றால் எங்களுடைய அணுகுமுறை வேறு மாதிரி இருக்கும். இதே மாநிலத்தில் எத்தனையோ அடக்குமுறைகளையும் எத்தனையோ முதலமைச்சர்களையும் சந்தித்த கட்சிதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். அதனால் தோழமை தொடர வேண்டும். நான் சொன்ன அணுகுமுறைகள் மாற்றம் வேண்டும்.
2026ல் தி.மு.க. மற்றும் சி.பி.எம். கூட்டணி தொடருமா என்று கேட்டால், நான் சொன்ன பிரச்சனைகளான நிரந்தர பணி கொடுக்கும் செயல்பாடுகள் நேற்று உருவானது அல்ல. அது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் படிப்படியாக உறுவானது. தமிழ்நாட்டில் இப்போது மக்கள் தொகை 8 கோடி ஆகி இருக்கும் சூழலில் பணியிடங்களைக் குறைக்கிறார்கள். இப்படிச் செய்தால் எப்படி நிர்வாகம் நடக்கும்? இன்றைக்கு தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்கலாம் நாளைக்கு வேறொரு கட்சி வரலாம். ஆனால் இதுபோன்ற அடிப்படை விஷயங்களில் கை வைப்பது கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம் இல்லை. அதனால் தி.மு.க.-வின் அணுகுமுறையைப் பொறுத்துத்தான் கூட்டணியைத் தீர்மானிக்க முடியும். அணி உடையாமல் இருந்து தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் எங்களைவிட அவர்களுக்குத்தான் பொறுப்பு அதிகம். அதனால் அதை அவர்கள்தான் முடிவு பண்ண வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாணவி துன்புறுத்தல் போன்ற சம்பவம் நடந்தால் அதில் எப்படி தோழமை கட்சிகள் கருத்துச் சொல்லாமல் இருக்க முடியும்? இந்த விஷயத்தில் முதலில் போராட்டத்தில் ஈடுபட்டது எங்களுடைய எஸ்.எஃப்.ஐ. மற்றும் மாதர் சங்கத்தினர்தான். அதன் பிறகு உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டு, உயர்நீதிமன்றம் தானாக வந்து வழக்கைக் கையில் எடுத்து மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு போட்டு விசாரித்து வருகின்றனர். இப்படி விசாரணை நல்ல முறையில் நடந்து கொண்டிக்கும் சூழலில் திடீரென எஃப்.ஐ.ஆர். நகல் லீக் ஆனது. இதுபோன்ற வழக்குகளில் எஃப்.ஐ.ஆர். லீக் ஆவது பாலியல் வன்கொடுமையைவிடக் கொடுமையானது. பாதிக்கப்பட்ட பெண்ணை பார்த்து இப்படி நடந்தால் மூடி மறைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று சொல்வதைப்போல்தான் இருக்கிறது. அதனால் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் சி.பி.எம்-ன் நிலைப்பாடு.
2026ல் தி.மு.க. வெற்றி என்பது அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தான் இருக்கிறது. அதை நிறைவேற்றாமல் இருப்பதால் ஆசியர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். ஆனால், தி.மு.க. அமைச்சர்கள் சிலர் 99% வாக்குறுதிகளை நிறைவேறியதாகப் பேசி வருகிறார்கள். மொத்தமாக 505 வாக்குறுதிகளை தி.மு.க. கொடுத்துள்ளது. அதில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. சொல்லாத வாக்குறுதிகளை தி.மு.க. செய்தது வரவேற்கத்தக்கது. அதுபோல் சொன்ன வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் மக்களுடைய அதிருப்திக்கு அரசு ஆளாகும். அரசுக்கு கெட்ட பெயர் வரும். இதைச் சொன்னால் மத்திய அரசு நிதி தரவில்லை என சொல்வார்கள். உதாரணத்திற்கு நான் ஒன்று கேட்கிறேன், சாதி ஆணவக் கொலையைத் தடுக்க சட்ட இயற்ற வேண்டும் என நாங்கள் கேட்டோம். அதற்கு முதல்வர் இருக்கிற சட்டமே போதும் என சட்டமன்றத்தில் சொன்னார். இதற்கு என்ன நிதி நெருக்கடி பிரச்சனை இருக்கிறது? முதலமைச்சரின் அந்த பதிலுக்குப் பிறகு ஏராளமான சாதிய ஆணவப் படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. இதுபோல பல விஷயங்களில் எங்களுக்கும் தி.மு.க.-வுக்கும் இடையே கருத்துகள் இருக்கிறது. தி.மு.க. முதலாளித்துவ கட்சி நாங்கள் தொழிலாளி வர்க்க கட்சி. அதனால் நாங்கள் உழைக்கும் மக்கல் நலன் சார்ந்த பிரச்சனைகளில் வேறுபட்ட நிலைப்பாடு எடுப்பதைத் தவிர்க்க முடியாது. எங்களுடைய வர்க்கம் சார்ந்துதான் நாங்கள் கோரிக்கை வைப்போம். எனவே நாங்கள் தி.மு.க. அரசின் அங்கம் கிடையாது. தி.மு.க. அரசு நல்லது செய்தால் அவர்களைச் சேரும் எனவும் கெட்டது செய்தால் தோழமை கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும் என தமிழ்நாட்டில் பலர், ஏன் இதைக் கேட்க மாட்டீர்களா? போகும் இடத்தில் எல்லாம் எங்களைப் பார்த்து கேள்வி கேட்கிறார்கள். தி.மு.க. வேறு சி.பி.எம். வேறு. குறிப்பிட்ட விஷயத்தில் அப்போது இருந்த அ.தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்தி புதிய அரசாங்கத்தை ஏற்படுத்த உதவினோம். அந்த முறையில்தான் தொகுதி உடன்பாடு செய்து போட்டியிட்டோம். அதே போல் தி.மு.க. ஆட்சியும் பெண்களுக்கு இலவச பேருந்து என சில நல்ல காரியங்கள் செய்திருக்கிறார்கள். இதெல்லாம் சாதாரணமான விஷயம் கிடையாது பாராட்டத்தக்கது என்றார்.