புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை இரண்டாம் கட்ட அகழாய்வானது 18.06.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட அகழாய்வில் B21, C22, G27, C20, A22, C21, B22, F27, A20 என 9 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், கண்ணாடி வளையல்கள், மாவுக் கல் மணிகள், கிறிஸ்டல் மணிகள், இரும்பு ஆணிகள், சுடுமண்ணாலான சக்கரம், அஞ்சனக்கோல், செப்புக்காசு, தேய்ப்புக் கல், அரைக்கும் கல், அகேட் கல் மணி, தக்களி, எலும்புமுனைக் கருவி, செப்பு ஆணிகள், சூதுபவள மணிகள், குளவிக்கல், சுடுமண்ணாலான காதணி, இரும்பு மற்றும் செம்பிலான பொருட்கள் என 1743 தொல்பொருட்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மழையினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 20.01.25 அன்று முதல் தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றது.தற்போது C21 எனும் குழியில் 192 - 196 செ. மீ ஆழத்தில் எலும்பு முனைக் கருவி ஒன்று கிடைத்துள்ளது. இதன் எடை 7.8 கிராம், நீளம் 7.4 செ. மீ, விட்டம் 1 செ. மீ ஆகும். மேலும் B21 எனும் குழியில் உடைந்த நிலையில் தங்கத்தின் சிறிய பகுதி கிடைத்துள்ளது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு தங்க மூக்குத்தி கிடைத்திருந்த நிலையில் தற்போது தங்கத்தின் உடைந்த பகுதி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.