Skip to main content

ஸ்டார் தொகுதி எம்.எல்.ஏ-வாக ரவி மோகன்

Published on 29/01/2025 | Edited on 29/01/2025
ravi mohan 34th movie title as Karathey Babu Teaser released

ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்றிய நிலையில் தற்போது டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ஒரு படம் நடித்து வந்தார். இந்தப் படம் ரவி மோகனின் 34வது படமாக உருவாகிறது. ஸ்கிரீன் சீன் மீடியா தயாரித்து வரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியானது. அதில் ரவி மோகன் இரண்டு கெட்டப்புகளில் இருந்தார். 

இதையடுத்து இப்படத்தில் இயக்குநர் மற்றும் வசகர்த்தா ரத்னகுமார் இணை எழுத்தாளராக இணைந்தார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் தற்போது வெளியாகியுள்ளது. தலைப்பை அறிவிப்பதற்கு ஏற்ப டீசரில் காட்டப்படும் காட்சிகளும் அமைந்துள்ளது. சட்டமன்றத்தில் நடக்கும் ஒரு காட்சி டீசரில் இடம்பெற்றிருக்கும் நிலையில் அதில் எதிர்கட்சி தலைவராக வரும் கே.எஸ்.ரவிக்குமார் முதலமைச்சரைப் பார்த்து, அவர் எதற்கு என் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் பழைய பெயரைத் தெரிந்து கொள்ள இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார், பெயரில் என்ன இருக்கிறது என கேள்வி எழுப்ப அதற்கு முதலமைச்சராக வரும் நாசர், பெயருக்குப் பெரிய விளக்கம் கொடுக்கிறார்.

பின்பு அவர் தெரிந்து கொள்ளும் சட்டமன்ற உறுப்பினராக வரும் ரவி மோகன், முதலமைச்சர் என்னுடைய பழைய பெயரை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில் மகிழ்ச்சி என சொல்லி, “உங்கள் அனைவருக்கும் என்னை சண்முக பாபுவாகத் தான் தெரியும் ஆனால் எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. 17வருடங்களுக்கு முன் ஆர்.கே.நகர் மக்களால் கொடுக்கப்பட்ட பெயர் அது” எனக் கூறி முடிக்க படத்தின் தலைப்பு ‘கராத்தே பாபு’ என காட்டப்படுகிறது. அறிவிப்பு போஸ்டரில் காட்டப்பட்டது போல் ரவி மோகன் கராத்தே பாபு எப்படி சண்முக பாபுவாக மாறினார் என்பதை விரிவாக பேசவுள்ளது போல் தெரிகிறது. மேலும் அரசியல் கதைக்களத்தில் படம் அமைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து வருகிறது. 

இப்படத்தின் இசையமைப்பாளர்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஹாரிஸ் ஜெயராஜ் கமிட்டாகியிருந்த நிலையில் தற்போது சாம் சி.எஸ். கமிட்டாகி இசையமைத்து வருகிறார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருவதாக டைட்டில் டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டீசரில் நாசர் பேசும், “மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடாக மாறியதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. தமிழ்நாடு தமிழகமாகாமல் இருக்க பாதுகாத்துக் கொள்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது” என்ற வசனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

சார்ந்த செய்திகள்