சென்னை அண்ணா சாலையில் உள்ள 'ஜிம்கானா' கிளப்-ல், 150க்கும் மேற்பட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலார்களுக்கு மீண்டும் வேலை மற்றும் முழு ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து பேசிய அந்த கிளப்-ன் எல்.டி.யு.சி. தொழிலாளர் சங்கத் தலைவர் பாரதி, “இங்கு இருக்கும் ஜிம்கானா கிளப்பிற்கும் மெட்ராஸ் கிளப்பிற்கும், பெரும் பணக்காரர்களும், அரசியல்வாதிகளும், அரசுத் துறையில் இருக்கும் உயர் அதிகாரிகளும் வந்துபோவார்கள். இங்கு அவர்கள் மது அருந்துவது, பில்லியேட்ஸ் ஆடுவது மற்றும் குடும்பத்தினருடன் வந்து உணவருந்துவது உள்ளிட்டவற்றை செய்வார்கள். இங்கு மொத்தம் 149 தொழிலாளிகள் இருந்தனர். கரோனா காலத்தில் 50% ஊதியம்தான் தர முடியுமென ஜிம்கானா கிளப் நிர்வாகம் சார்பாகவும் 70% ஊதியம்தான் தர முடியுமென மெட்ராஸ் கிளப் நிர்வாகம் சார்பாகவும் தெரிவிக்கப்பட்டது. சமூகத்தின் அடித்தட்டு மக்கள்தான் இங்கு பணிபுரிகிறார்கள். அவர்கள் முழு ஊதியம் கேட்ட ஒரே காரணத்திற்காக ஜிம்கானா கிளப்பில் இருந்து 56 தொழிலாளர்களும் மெட்ராஸ் கிளப்பில் இருந்து 39 தொழிலாளர்களும் வெளியேற்றப்பட்டனர். அரசாங்கம் நினைத்திருந்தால் இதற்கு ஆணை போட முடியும். ஆனால், அரசாங்கம் வெறும் அறிவுரையை மட்டும் வழங்கியது.
இங்கு பணி செய்யும் தொழிலாளர்கள் மார்ச் மாதத்திலிருந்து பாதி ஊதியத்துடனும், செப்டம்பர் மாதத்திலிருந்து ஊதியமே இல்லாமலும் இருக்கிறோம். எங்களுக்குப் பொருளாதார மரண தண்டனையை இந்த கிளப் நிர்வாகங்கள் கொடுத்திருக்கிறது. தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு இதற்குத் தீர்வுகாண வேண்டும். இன்று ஒன்பதாவது நாளாக நான் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறேன். முதல்வரை சந்திக்க வேண்டும் என நியாயம் கேட்ட தொழிலாளர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்கி கைது செய்திருக்கிறார்கள். ஏ.சி. சரவணன், அவதூறான வார்த்தைகளைப் பேசி, அடித்து ஏழை தொழிலாளர்களைக் கைது செய்துள்ளார். எங்களின் போராட்டம் தமிழக அரசு தலையிட்டு அரசாணை போடும்வரை தொடரும்” என்று தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து அன்பழகன் எனும் தொழிலாளி, “கரோனா தொற்று பரவலைக் காரணம் காட்டி இந்த இரண்டு கிளப் நிர்வாகங்களும் எங்களுக்கு ஊதிய குறைப்பு செய்துள்ளது. அவர்கள் சந்தோஷத்திற்கு எங்களை ஊறுகாய்போல் பயன்படுத்துகிறார்கள். இரவும் பகலுமாக நாங்கள் கஷ்டப்பட்டோம். இந்த கிளப்-ன் முதலாளிகள் வசதியாக ஆடி காரிலும் ஏசி அறையிலும் இருக்கிறார்கள். நாங்கள் இங்கு கொசுக் கடியில் வயிறு எரிந்திருக்கிறோம். நான் 16 வருடமாக இங்கு வேலை செய்கிறேன்; இன்னும் ரூ.16 ஆயிரம் சம்பளத்தை தாண்டவில்லை. ஆனால், அவர்கள் கோடிக் கணக்கில் வைத்திருக்கிறார்கள்.
கரோனா காரணம் காட்டி நான்கு மாதங்களாக சம்பளம் போடவில்லை. அதைக் கேட்டால் பணமில்லை என்கிறார்கள். பாரதி இன்றோடு ஒன்பதாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். எங்களுக்கெல்லாம் கஷ்டமாக இருக்கிறது. இதுவரை இரண்டு கிளப்பும் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை. என் ஒரு ஓட்டுக்காக எனது குடிசை வீட்டுக்குள் நுழைந்துவரும் அரசு இந்த விஷயத்தில் ஏன் தலையிடவில்லை. தலையிட்டு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும். இங்கு வேலை செய்யும் யாரும் வசதியாக இருப்பவர்கள் கிடையாது.
அனைவரும் வறுமைக்கோட்டின் கீழ் இருப்பவர்கள்தான். நானும் என் குழந்தைகளும் பட்டினியில் இருக்கிறோம். எங்களுக்கு முழு ஊதியத்துடன் வேலை வேண்டும். இன்று மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டேன்; தடுத்துவிட்டார்கள். நாளை என் குழந்தை குட்டியுடன் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன், அங்குவந்து உங்களால் தடுக்கமுடியுமா?” என்று வேதனையை வெளியிட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.