Skip to main content

சர்வதேச பாடகரின் இசை நிகழ்ச்சி; சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Published on 05/02/2025 | Edited on 05/02/2025
 A concert by an international singer Traffic change in Chennai

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. (Y.M.C.A.) மைதானத்தில் எட் ஷீரன் இசை நிகழ்ச்சி இன்று (05.02.2025) நடைபெறுகிறது. இதன் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சர்வதேச பாடகர் எட் ஷீரனின் 2025 இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை 03.00 மணி முதல் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு ஏராளமான பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வின் காரணமாக போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தோசிக்கப்பட்டுள்ளன. அதன்படி நிகழ்ச்சிக்கு தேனம்பேட்டை வழியாக பார்வையாளர்களை ஏற்றி வரும் ஆட்டோரிக்க்ஷா மற்றும் வாடகை வாகனங்கள் (மஞ்சள் பலகை வாகனங்கள்) செனடாப் சாலை / காந்தி மண்டபம் சாலை, சேமியர்ஸ் ரோடு, லோட்டஸ் காலனி 2வது தெரு (நந்தனம் எக்ஸ்டன்) வழியாக மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடையலாம். சைதாப்பேட்டையிலிருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வலதுப்பக்கம் வழியாகச் சென்று சேமியர்ஸ் சாலையில் "யு" டேர்ன் செய்து லோட்டஸ் காலனி வழியாக இலக்கை அடையலாம்.

அண்ணாசாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. பிரதான மற்றும் காஸ்மோபாலிட்டன் நுழைவாயிலில் வி.வி.ஐ.பி. பாஸ் மற்றும் திரை கலைஞர்கள் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்கள் மெட்ரோ ரயில், மாநகர போக்குவரத்து பேருந்து மற்றும் மின்சார இரயில் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் மற்றும் நடைபாதையை பயன்படுத்தி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்