70 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் இன்று (05.02.2025) ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக 13 ஆயிரத்து766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 3வது முறையாக ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் கடும் போட்டியில் உள்ளன. இந்த தேர்தலில் சுமார் 1.56 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற தகுதி பெற்றுள்ளனர். டெல்லி முழுவதும் 30 ஆயிரம் போலீசார், 220 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையொட்டி வாக்காளர்கள் வரிசையாக நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பதிவாகும் வாக்குகள், பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள், இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. இதனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் பனியையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி ஆர் ஆலிஸ் வாஸ், திலக் மார்க்கில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். கல்காஜி சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அல்கா லம்பா மடிபூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மியின் வேட்பாளராக டெல்லி முதல்வர் அதிஷியும், இந்த தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் முன்னாள் எம்பி ரமேஷ் பிதுரியும் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி சட்டபேரவை தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த ஜனநாயகத் திருவிழாவில் இங்குள்ள வாக்காளர்கள், முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளம் தலைமுறையினர் முழு ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது மதிப்புமிக்க வாக்கை செலுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.