ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள பவானிசாகர் அணை தான் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. மேலும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் என மூன்று மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது சென்ற மூன்று நாட்களாக நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக வனப்பகுதியில் ஆங்காங்கே உள்ள சிற்றோடைகள் வழியாக வரும் தண்ணீர் மூலம் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் சென்ற நான்கு நாட்களில் மளமளவென உயர்ந்து இன்று மாலை 3 மணி நேர நிலவரப்படி அனையின் நீர்மட்டம் 96.85 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 39,617 கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்த அணையிலிருந்து அரக்கன்கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலில் 400 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கும் 500 கன அடி நீர் என மொத்தம் 900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நாளை 8 ஆம் தேதி இரவுக்குள் அணை 100 அடியை எட்டிவிடும் என்றும் முழுகொள்ள வான 105 அடி 9 ஆம் தேதி நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை கரையோரங்களில் வசிப்பவர்களைப் பாதுகாப்பான பகுதிக்குச் செல்லுமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள ஐயப்பன் கோவில் படித்துறை, விநாயகர் கோவில் படித்துறை கோட்டு வீரம் பாளையம், ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவித்துள்ளனர். பொதுமக்கள் பவானி ஆற்றில் இறங்கி குளிக்கக் கூடாது என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை நிரம்பினால் அனைக்கு வரும் முழு நீரும் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்படும் இது பவானி கூடுதுறையில் உள்ள காவேரி ஆற்றில் கலக்கும் இதனால் காவேரி கரையோரங்கள் வெள்ள அபாயம் ஏற்படுவதோடு மொத்த நீரும் வீணாகக் கடலில் போய் கலக்கும் சூழல் தான் உள்ளது.