Skip to main content

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஐந்தாண்டு ஊதியத்தை திருப்பித் தரவேண்டும்! -தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு!

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

 

தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., தான்  ஊதியமாகப் பெற்ற ரூ.21.58 லட்ச ரூபாயை நான்கு வாரங்களில் தமிழக அரசுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். 

v

 

அரசு ஒப்பந்தகாரர் எம்.எல்.ஏ. ஆனது செல்லாது!

திருநெல்வேலி மாவட்டம் – சேரன்மாதேவி தொகுதியில், கடந்த 2006-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் வேல்துரை. அரசு ஒப்பந்தகாரராக இருந்துகொண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வேல்துரை பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்,  அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மனோஜ் பாண்டியன். இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மனோஜ்பாண்டியன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வேல்துரை பெற்ற வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தது.  

உச்ச நீதிமன்ற தீர்ப்பினைத் தொடர்ந்து, 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்து வேல்துரை பெற்ற ஊதியமான, ரூ.21,58,000-ஐயும், 201 நாட்கள் சட்டமன்ற பணியில் பங்கேற்றதற்கு, நாள் ஒன்றுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார் தமிழ்நாடு சட்டமன்ற செயலாளர். 

 

m

 

எம்.எல்.ஏ.வை அரசு ஊழியரோடு ஒப்பிட முடியாது!

சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் வேல்துரை. இவ்வழக்கை விசாரித்தார் நீதியரசர் பார்த்திபன். விசாரணை நடந்தபோது, அரசு ஊழியர் ஒருவர் ஏதாவது குற்றம் செய்து பணியிலிருந்து நீக்கப்பட்டால், அதுவரை அவர் பெற்ற சம்பளம் திரும்பப் பெறப்பட மாட்டாது. அதுபோல, அரசு ஊழியர் என்ற அடிப்படையில், எம்.எல்.ஏ.வாக இருந்தவரிடம் ஊதியத்தை திருப்பிச் செலுத்தும்படி கோர முடியாது என்று வேல்துரை தரப்பில் வாதாடினர். 

 

சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதே செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டதால், எம்.எல்.ஏ. என்ற அந்தஸ்தை இழந்துவிட்டார்  வேல்துரை. அதனால், 5 ஆண்டுகள் அவர் பெற்ற ஊதியத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று வாதாடிய அரசுத் தரப்பு, அரசு ஊழியர்களுடன் மனுதாரர் தன்னை ஒப்பிட முடியாது என்றும் தெரிவித்தது. 

 

இருதரப்பினர் வாதங்களையும் கேட்ட நீதியரசர், வாழ்வாதாரத்துக்காக சம்பளம் வாங்கும் அரசு ஊழியரையும், மக்கள் சேவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வையும் ஒரே மாதிரி கருதமுடியாது என்று தெளிவுபடுத்தி, உச்ச நீதிமன்ற தீர்ப்பு பிரகாரம், தேர்தலில் போட்டியிட்டு வேல்துரை பெற்ற வெற்றி செல்லாது என நிரூபிக்கப்பட்டுவிட்டதால், அவர் தானாகவே முன்வந்து ஊதியத்தை திருப்பி அளித்திருக்க வேண்டும் என்று கூறி, 4 வாரங்களில் மொத்த ஊதியத் தொகை ரூ.21,58,000-ஐ திருப்பிச் செலுத்த வேண்டும் என்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.   


 

சார்ந்த செய்திகள்