
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருச்சி - சேலம் ரவுண்டானா சாலை அருகில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோவில் கிளை ரூ.20 கோடியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்தக் கோவிலுக்கான அன்னதான கூடம் ரூபாய் இரண்டு கோடி மதிப்பீட்டில் கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
இதற்காக பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத யாகம் நடத்தப்பட்ட பின்னர் நடைபெற்ற பூமி பூஜையில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி கலந்துகொண்டு வேத மந்திரங்கள் ஓத மங்கள வாத்தியங்கள் முழங்க பூமி பூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் பெய்கின்ற மழை முழுவதுமாக வடிய வேண்டும் என்பதால் மழை நீர் வடிகால் வசதி மற்றும் திட்டமிடப்பட்டு அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திமுக அரசு துரிதமாகச் செயல்படவில்லை என்பதால் மழை நீர் வடிகால் வசதி திட்டம் முழுமை பெறவில்லை. ஆன்லைன் ரம்மி தடை செய்யச் சட்டமன்றத்தில் மீண்டும் தனி சட்ட வடிவம் கொண்டு வரப்பட்டு இயற்றப்பட்டிருந்தால் இதற்கு ஒரு முடிவு ஏற்பட்டிருக்கும். ஆனால் அதனை திமுக அரசு செய்யவில்லை; அதற்குப் பதிலாக உயர்நீதிமன்ற கொடுத்த ஆலோசனைக்கு பதிலாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்கள்.
சட்ட ஒழுங்கு சீர்கெட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தான் தமிழகத்தில் உள்ளது. காவல் துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து சட்ட ஒழுங்கினை பாதுகாக்க வேண்டும். பருவமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்றார்.