ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீரஹள்ளி வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், தாளவாடி அடுத்த கெட்டவாடியைச் சேர்ந்த இளங்கோ என்பவரது 3 ஏக்கர் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை பயிர்களை யானை சேதப்படுத்தியுள்ளது.
இன்று 6 ந் தேதி அதிகாலை வனப்பகுதியில் இருந்து வந்த 8 காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து கரும்பு, வாழை பயிரை முடிந்த வரை சாப்பிட்டு விட்டு பயிர்களை மிதித்தும் சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு எழுந்து பார்த்த விவசாயி யானைகள் பயிர்களை சேதப்படுத்தியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி பக்கத்துத் தோட்டத்து விவசாயிகளுக்குத் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த விவசாயிகள் சப்தம் போட்டும் பட்டாசு வெடித்தும் யானைகளைத் துரத்தினர். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின் யானைகள் காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டன.
1 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரும்பு, 500 வாழைகள், 50 தென்னை கன்றுகள் என லட்சம் ரூபாய் மதிப்புள்ள பயிர்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளது. தொடர்ந்து யானைகள் விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். யானைகளால் சேதமடைந்த விவசாய பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வனப்பகுதியைச் சுற்றி அகழி அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.