கொடநாடு கொலை – கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்கும் வரை திமுக தொடர்ந்து போராடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொடநாடு விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும், இதில் சம்பந்தப்பட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகிட வேண்டுமென வலியுறுத்தியும் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இன்று (24-01-2019) சென்னை மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடத்தில் பேசிய விவரம் மு.க.ஸ்டாலின்,
கொடநாடா? கொலை நாடா? என்ற நிலையில் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் ‘ஒரு கொலைக் குற்றவாளி’ என்பதை ஆதாரங்களோடு சில நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது என்பது நாட்டிற்கு நன்றாகத் தெரியும்.
எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கையை தமிழக ஆளுநர் அவர்கள் எடுக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நாங்கள் ஏற்கனவே, அவரிடத்தில் நேரடியாகச் சென்று 4 முக்கியமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து அவரிடத்தில் ஒரு புகார் மனுவைத் தந்திருக்கின்றோம்.
அந்த நான்கு புகார்களில் ஒன்று இந்த கொலைக் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்களை உடனடியாக முதலமைச்சர் பதவியில் இருந்து கவர்னர் இறக்கிட வேண்டும். அப்பொழுது தான், உண்மையான முறையான ஒரு விசாரணை நடைபெற முடியும்.
அடுத்து இரண்டாவதாக கவர்னர் அவர்கள் உடனடியாக இந்திய நாட்டினுடைய ஜனாதிபதியிடத்தில் நேரடியாகச் சென்று இதுகுறித்து விளக்கிச் சொல்லி அவர் மூலமாக இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூன்றாவதாக உயர் நீதிமன்றத்தினுடைய நீதிபதி மேற்பார்வையில் ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்.
அடுத்து நான்காவதாக, மர்மமான முறையில் விபத்தில் இறந்ததாக சொல்லப்படக்கூடிய டிரைவர் கனகராஜ் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர், எனவே, அவருடைய மர்ம மரணம் குறித்தும் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், நான்கு முக்கியமான பிரச்னைகளை திராவிட கழகத்தின் சார்பில் நாங்கள் கவர்னரிடத்தில் எடுத்துச் சொல்லியிருக்கின்றோம்.
ஆனால், இதுவரையில் அவர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றார் என்ற செய்திகள் வரவில்லை. எனவே, அதை வலியுறுத்தக்கூடிய வகையில், வற்புறுத்தக்கூடியச் சூழ்நிலையில் சென்னை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகங்களின் சார்பில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தியிருக்கின்றது.
தி.மு.கழகத்தினுடைய தலைவராக இருக்கக்கூடிய என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருக்கக்கூடிய கழக நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள், கழகத்தினுடைய செயல்வீரர்கள், மகளிர், இளைஞர்கள், மாணவர்கள் அத்துனை பேருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுதலையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
செய்தியாளர்: ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க உச்ச நீதிமன்றம் இப்பொழுது உத்தரவிட்டுள்ளது. அது பற்றி உங்களின் கருத்து?
மு.க.ஸ்டாலின்: உலக முதலீட்டாளர் மாநாடு என்ற ஒரு போலி மாநாட்டை நடத்திருக்கொண்டிருக்கும், எடப்பாடி பழனிசாமியிடம் சென்று இந்தச் செய்தியை சொல்லுங்கள். அவர் என்ன பதில் சொல்லுகின்றார் என்று கேட்டுவிட்டு அதனை மக்களிடத்தில் சொல்லுங்கள்.
செய்தியாளர்: மக்கள் விரோதப்போக்கை தொடர்ந்து கடைபிடிக்கும் அ.தி.மு.க அரசைக் கண்டித்து பல்வேறு போராட்டத்தை பொதுமக்கள் மேற்கொள்கிற சூழ்நிலை இருக்கின்றது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான அமைச்சர்கள் மீது கவர்னரிடம் அனைத்துப் புகார்களும் கொடுக்கப்படுகின்றது. கவர்னர் அனைத்துப் புகார்களையும் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்க மறுக்கின்றாரா?
மு.க.ஸ்டாலின்: மத்திய அரசு பின்னால் இருந்துகொண்டு இவர்களுக்கு முழு அளவிற்கு ஆதரவு தந்துகொண்டு இருக்கின்றது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இருந்தாலும், இதை நாங்கள் விடப்போவதில்லை, தொடர்ந்து இதுபோன்ற போராட்டங்களைத் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.