Skip to main content

இ-பாஸ் நடைமுறை; திண்டுக்கல் ஆட்சியர் முக்கிய அறிவுறுத்தல்!

Published on 07/05/2024 | Edited on 07/05/2024
E-pass procedure; Dindigul Collector Key Instruction

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மலைப் பிரதேசமான உதகை மற்றும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், கடந்த ஏப்ரல் கடைசி தேதி முதல் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்தனர். இதனால் உதகை நகர்ப் பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே நீதிமன்ற வழக்கு ஒன்றில் வரும் மே 7ஆம் தேதி முதல் உதகை மற்றும் கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் இ-பாஸ் வாங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இ-பாஸ் முறையை அமல்படுத்த தேவையான தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும் என அரசுக்கும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது. மேலும் இ-பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே சுற்றுலாத்தலங்களில் அனுமதி தர வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அதிகாரப்பூர்வமாக நேற்று முன்தினம் (05.05.2024) அறிவிக்கப்பட்டது. உதகை, கொடைக்கானல் செல்வோர் epass.tnega.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம்  எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் உதகை மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு நேற்று (06.05.2024) காலை 6 மணி முதல் தொடங்கியது. அதன்படி epass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இ-பாஸ் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. உதகை, கொடைக்கானல் சுற்றுலா செல்வோர்  இன்று (07.05.2024) முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வாகனங்களுக்கு இ-பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. அதே சமயம் அரசுப் பேருந்துகளில் சுற்றுலா செல்வோருக்கு இ-பாஸ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

E-pass procedure; Dindigul Collector Key Instruction

இந்நிலையில் உதகை மற்றும் கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று (07.05.2024) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து இ-பாஸ் தொடர்பான சந்தேகங்களை போக்கிக்கொள்வதற்காக தொலைபேசி எண்களை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்டம்  கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் 07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை இ-பாஸ் (ePass) பதிவு செய்து வர வேண்டும்.

சுற்றுலா பயணிகள் “epass.tnega.org” என்ற இணைய முகவரியில் விபரங்களை பதிவேற்றம் செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம். இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு இ-பாஸ் (Local ePass) பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு 0451 2900233 என்ற தொலைபேசி எண்ணிலும், 9442255737 என்ற கைபேசி எண் வாயிலாகவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களைத் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா. பூங்கொடி தெரிவித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்