
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இடம் தொடர்பான பிரச்சனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாகவும் கூறி கடந்த திங்கள்கிழமை அன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்றபின் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இந்த பிரச்சனை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் பரமசிவம் சிறப்பு உதவி ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் ஏட்டு பாலு ஆகியோர் பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் ஒருதலை பட்சமாக செயல்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் மூன்று பேரையும் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.