கரோனா பரவலைத் தடுக்கும் விதமாகப் போடப்பட்டுள்ள ஊரடங்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீசார் காய்கறிகள் வாங்க வேண்டும் என்றால் பணிநேரத்தில் செல்ல வேண்டும். அப்படி செல்லாமல் பணியாற்றினால் சத்தான உணவைச் சாப்பிடும் நிலை தவிர்க்கப்படும். இதனையறிந்த கடலூர் டி.எஸ்.பி சாந்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
பணியில் இருக்கும் காவலர்களுக்கு தினமும் முகக் கவசம் வழங்குதல், கப சுர குடிநீர் வழங்குதல், காலை மாலை வேளைகளில் தேநீர் சினாக்சுடன் வழங்குதல் எனப் பல்வேறு தேவைகளை நிறைவேற்றி வருகிறார். அதன் ஒரு பகுதியாகச் சொந்தச் செலவில் ஒரு வாரத்திற்குத் தேவையான சத்தான காய்கறிகள் வாங்கி பணியில் இருக்கும் போலீசாருக்கு வழங்கினார். அத்தோடு காவலர்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் காய்கறிகள் பைகளை வழங்கினார்.
மேலும் கடலூரில் நேற்று மதியம் நிகழ்ச்சி நடைபெற்ற ஜவான்பவன் சிக்னலில் துண்டு, கைக்குட்டை அணிந்து வந்த பொதுமக்களுக்கு முகக் கவசங்களையும் அவரே அணிவித்து அனுப்பிவைத்தார்.
போலீசாருக்கு மதிய உணவு வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தார். அப்போது கூடுதலாக உணவுப் பொட்டலங்கள் வழங்கி பசியோடு வரும் முதியவர்கள், வழிப்போக்கர்களுக்கும் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார். காவல்துறை அதிகாரியின் கனிவான இச்செயல்களைக் காவலர்களும், பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.