உயர் ஜாதிக்காரர்கள் மட்டும் தான் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற சூழ்ச்சியை இந்த அரசுகள் நீட் தேர்வு மூலம் கொண்டு வந்திருக்கிறது என்பது தற்போது அம்பலமாகி இருக்கிறது என்கிறார் திருமுருகன் காந்தி.
திருவாரூரில் தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாள் விழா மற்றும் திருவள்ளுவர் 2050 ஆண்டுகள் அடைவுகள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்றார்.
அங்கு அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், ’’தமிழர்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது. வெள்ளைக்கார அரசை போல தமிழக எடப்பாடி அரசு செயல்படுகிறது. மத்திய பாஜக அரசுக்கு தமிழக அரசு அடிபணிந்து நிற்கிறது. ராணுவ கட்டுக்கோப்புடன் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நீட் தேர்வுகளில் கூட ஆள்மாறாட்டம் நடத்தப்பட்டிருக்கும் நிகழ்வு பற்றி அரசு என்ன பொறுப்பேற்க போகிறது. இப்படிப்பட்ட முறைகேடான ஒரு தேர்வு முறையை வைத்துக்கொண்டு சிறந்த மருத்துவர்களை உருவாக்குவோம் என்பதை எப்படி நம்புவது.?
உயர் ஜாதிக்காரர்கள் பணக்காரர்கள் மட்டும் தான் மருத்துவம் படிக்க வேண்டும். மற்றவர்கள் மருத்துவம் படிக்கக்கூடாது என்ற சதிகாரதனத்தை, சூழ்ச்சியை இந்த அரசு நீட் தேர்வு மூலம் கொண்டு வந்திருக்கிறது என்பது தற்போது அம்பலமாகி இருக்கிறது. நீட் தேர்வை ஒழித்தால் மட்டுமே சமூக நீதி நிலைநாட்டப்படும்.
மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் வேலைவாய்ப்பு வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலையில் மாநில அரசால் நடத்தப்படும் தேர்வுகளில் கூட தமிழ் மொழிக்கான உரிமை மறுக்கப்படுகிறது. ரயில்வே தேர்வு, வங்கி தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழிக்கான பங்களிப்பை படிப்படியாக திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தமிழக மாணவர்கள் இளைஞர்கள் போராட வேண்டும்.
ஆடிட்டர் குருமூர்த்தி தமிழக அரசில் எந்த அளவுக்கு முக்கியமானவர் என்று தெரியவில்லை. தமிழக மக்களுக்காக போராட்டங்கள் நடத்தி இருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் அத்தனை சீரழிவுகளுக்கும் பின்னால் இருக்கும் நபர்களில் அவரும் ஒருவர் என தெரிவித்தார்.’’ என்றார் அவர்.