
படுகொலை செய்யப்பட்ட ஹரிசக்தி, ஹரிஷ்
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் அருகே முட்டம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை மற்றும் மூவேந்தன் என்ற 3 பேரும் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை சார்பில் முட்டம் பகுதியில் சாராய விற்பனை தடுப்பு நடவடிக்கை நடைபெற்றது. அப்போது சாராய வியாபாரியான ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நேற்று (14.02.2025) ராஜ்குமார் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து சாராய விற்பனை செய்துள்ளார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது தினேஷ் சிறுவன், “ஏன் தெருவில் சாராயம் விற்கிறீர்கள்?” எனக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகள் சிறுவனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இளைஞர் ஹரிஷ் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மாணவன் ஹரிசக்தியும் நேற்று மாலை தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இந்த வாக்குவாதத்தைத் தடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகளான ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் ஹரிஷ், ஹரிசக்தி ஆகிய இருவரையும் சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் இந்த இளைஞர்கள் இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கைது செய்யப்பட்ட தங்கதுரை, ராஜ்குமார், மூவேந்தன்
அதனைத் தொடர்ந்து இந்த படுகொலை குறித்து பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சாராய வியாபாரிகள் 3 பேரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இதனையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறையை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்த இரட்டை கொலை சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட ஹரிஷ், ஹரிசக்தி ஆகிய இரண்டு பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரட்டை கொலைக்கு நீதி கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு நபர்களை கைது செய்ய வேண்டும். இதில் இரண்டு பெண் சாராய வியாபாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது. அவர்களையும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் உடலை பெற்றுக் கொள்வோம் என தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை காவல்துறையினர் வழங்கிய நிலையில் உறவினர்கள் இருவரின் உடல்களையும் பெற்றுக் கொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு உடல்களும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.