
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார், ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் பதவி வகித்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் நேற்றுடன் (18.02.2025) நிறைவடைந்தது. இத்தகைய சூழலில் தான் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு கூடியது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த தேடுதல் குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த குழுவின் பரிந்துரையின் படி இந்தியத் தேர்தல் புதிய தலைமை ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டார். மேலும் 1989ஆம் ஆண்டு ஹரியானா கேடர் ஐ.ஏ.எஸ். பேட்சை சேர்ந்த விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரையும் தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷியையும் நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முறைப்படி உத்தரவிட்டார். இவர் 2029ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி ஓய்வு பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
61 வயதாகும் ஞானேஷ்குமார் கடந்த 1988ஆம் ஆண்டு கேரளா கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பேட்சை சேர்ந்தவர் ஆவார். இவர் கேரள மாநிலத்தின் நிதி மற்றும் பொதுப்பணித் துறைச் செயலராகவும் பணியாற்றியுள்ளார். மத்திய அரசில் உள்துறை, பாதுகாப்புத்துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகத்தில் பணியாற்றியுள்ளார். இவர் தேர்தல் ஆணையத்தின் ஆணையராக பணியாற்றிய இவர் கடந்த 31ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் 17.02.2025 தேதியிட்ட அரசாணை அறிவிப்பின்படி, இந்தியாவின் 26வது தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று (19.02.2025) பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற பிறகு, ஞானேஷ் குமார் வாக்காளர்களுக்கு அனுப்பிய செய்தியில், “தேசத்தை கட்டியெழுப்புவதற்கான முதல் படி வாக்களிப்பதாகும். 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்காளராக மாற வேண்டும். வாக்களர்கள் எப்போதும் வாக்களிக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், தேர்தல் சட்டங்கள், விதிகள் மற்றும் அதில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் இருந்தது. அதன்படி எப்போதும் இருக்கும்” என்று அவர் கூறினார். இதனையடுத்து விவேக் ஜோஷியும் இன்று தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். இவர் கடந்த 1989ஆம் ஆண்டு ஹரியானா மாநில கேடரின் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.