அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை செய்ய அதிகாரிகள் சென்றனர். ஆனால், அசோக் வீட்டில் இல்லாமல் வீடு பூட்டியிருந்ததால் அதிகாரிகள் வெளியே காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த அசோக்கின் ஆதரவாளர்களுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கரூரில் திமுகவினர் எதிர்ப்பால் 10 இடங்களில் இன்னும் வருமான வரி சோதனை நடைபெறாமல் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய மேலும் மூன்று இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பவுத்திரம், காந்திகிராமம், க.பரமத்தி ஆகிய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
காலையிலிருந்து கரூரில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் .அதில் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இருந்தனர். அதில் பத்து பெண் அதிகாரிகள் இருந்தனர். சோதனை துவங்கிய சிறிது நேரத்திலேயே குறிப்பாக ராமகிருஷ்ணபுரத்தில் செந்தில் பாலாஜி சகோதரருக்கு சொந்தமான இடத்தில் சோதனை செய்ய முற்பட்டபோது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் பல இடங்களிலும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததிருந்தனர். இந்த நிலையில் கரூரில் மேலும் மூன்று இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.