
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார். இவரின் மனைவி தவமணி (வயது 38). இத்தம்பதியருக்கு 3 குழந்தைகள் இருந்தனர். கடந்த சில வருடங்களாகவே இத்தம்பதியருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அசோக் குமார் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இத்தகைய சூழலில் தான் அசோக் குமார் நேற்று (18.02.2025) இரவு கிருஷ்ணாபுரம் பகுதிக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று (19.02.2025) அதிகாலை வேளையில் தவமணியும், அவரது 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதில் வித்யதாரணி (வயது 13) மற்றும் அருள் பிரகாஷ் (வயது 5) என்ற இரு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
அதே சமயம் தவமணியும், அருள் குமாரி (வயது 10) என்ற மற்றொரு குழந்தையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அசோக்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சதீஷ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். 2 குழந்தைகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கெங்கவல்லி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தி உள்ளது.