30 ஆண்டுகளுக்கு பிறகு ஒட்டப்பிடாரத்தில் திமுக வெற்றிக்கனியை பறித்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இதுவரை நடந்த தேர்தல்களில் 1989-ல் திமுக வேட்பாளர் முத்தையா வெற்றி பெற்றார். அதன்பிறகு காங்கிரஸ், அதிமுக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்றிருந்தன. 1989 தேர்தலின்போது அதிமுக பிளவுபட்டு ஜெ.அணி, ஜா. அணி என 2 அணிகளாக போட்டியிட்டது. அதனால், திமுக எளிதில் வெற்றி பெற்றது.
இப்போதும், அதிமுக பிளவுபட்டு முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜ் அமமுக சார்பில் போட்டியிட்டு 30 ஆயிரம் வாக்குகளை பிரித்தார். அதிமுக அணியில் புதிய தமிழகம் இருந்தாலும், ஆரம்பத்தில் இருந்தே அவர்களுக்கு இடையே சரியான புரிதல் இல்லை. மேலும், ஸ்டாலினின் பிரச்சாரம், திமுக நிர்வாகிகளின் களப்பணி திமுக வேட்பாளருக்கு கை கொடுத்திருக்கிறது. குறிப்பாக ஆளுங்கட்சியின் பண பலத்தையும் தாண்டி வெற்றியை வசப்படுத்தி இருக்கிறது திமுக.