சிவகங்கை மாவட்ட காவல்துறை, தற்பொழுது போலீசார்களுக்கு லீவு கொடுத்து குடும்பத்தினரோடு சினிமா பார்க்க அனுப்பியுள்ளதுதான் ஏனைய மாவட்ட காவல்துறையின் ஏக்க பெருமூச்சாக உள்ளது.
சிவகங்கை, காரைக்குடி, தேவக்கோட்டை, திருப்புத்தூர் மற்றும் மானாமதுரை ஆகிய ஐந்து துணைச்சரகத்தினை உள்ளடக்கிய சிவகங்கை மாவட்டக் காவல்துறை பரப்பரப்பிற்கு பஞ்சமில்லாதது. சொந்த மாவட்டத்தில் மருதுபாண்டியர் குருபூஜை, பிள்ளையார்பட்டி விழா, தமிழ்நாடு அரசு தேர்வாணையத் தேர்வுகள், சிறாவயல் மஞ்சுவிரட்டு, கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு ஆகிய விழாக்களும், அருகிலுள்ள மாவட்டத்தில் நடைபெறும் தேவர் குருபூஜையும், இமானுவேல் சேகரனார் நினைவு நாளும் டென்சனாக்கிவிடும் சிவகங்கை மாவட்டப் போலீசாரை.!
மற்றைய எந்த மாவட்டத்திலும் இல்லாத பனிச்சுமை இவர்களு உண்டு. மன அழுத்தத்தில் உள்ள இவர்களை கண்டுகொள்வாரில்லை. இந்நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யாகப் பொறுப்பேற்ற ரோஹித்நாதன் ராஜகோபால் போலீசாரிடம் தனித்தனியே பேசி, அவர்களுடைய அழுத்தத்தை புரிந்துகொண்டு அதன்படி விடுமுறை, உணவுப்படி ஆகியனவற்றை உடனுக்குடன் வழங்கினார்.
இது இப்படியிருக்க, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் குருபூஜை விழாக்கள், தொடர்ந்து பண்டிகை தினங்கள், அதன் தொடர்ச்சியாக ஊரக உள்ளாட்சித் தேர்தல், எஸ்.ஐ.தேர்வு என தொடர் பணிகளால் போலீசார் கடுமையான மன அழுத்தத்தில் உழல, அதற்கடுத்து வரும் பொங்கல் பண்டிகை, மஞ்சுவிரட்டு உள்ளிட்டவைகளும் பாதிக்குமே எனக் கருதிய சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ரோஹித்நாதன் ராஜகோபால் மானாமதுரை, சிவகங்கை துணைச்சரகத்திற்குட்பட்ட போலீசாருக்கு விடுமுறை அளித்ததுடன் குடும்பத்துடன் தர்பார் பார்க்க அனுமதித்தார். மானாமதுரையில் செவ்வாய்க்கிழமையன்று காலைக்காட்சிக்கான சுமார் 500 டிக்கெட்களை முன்பே புக் செய்திருந்த மானாமதுரை துணைச்சரக போலீஸ், படம் பார்க்க வந்த அனைவரையும் சந்தனம், குங்குமம் கொடுத்து வரவேற்று திரைப்பட இடைவேளையின் போது டீ, பிஸ்கட்ஸ் வழங்கியது. எங்கள் மாவட்டத்திலும் இதனைப் போன்று அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை மற்றைய மாவட்டத்திலும் கேட்பது தான் சிவகங்கை மாவட்டப் போலீசாரின் வெற்றி ரகசியம்.