![cuddalore](http://image.nakkheeran.in/cdn/farfuture/qtkXSQWlVHD1g60MymSIrZ4F-gPhMmEaAjL4FOHvSng/1595256165/sites/default/files/inline-images/CUPJ_Entrance_Arch.jpg)
கடலூர் மாவட்டத்தில் பெண் ஊராட்சி தலைவர்களை செயல்பட விடாமல் தடுப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
ஏற்கனவே கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியம் பெரியகாப்பான்குளம் ஊராட்சி மன்ற தலைவரான தமிழ்ச்செல்வி அரங்கநாதன் என்பவர் தன்னை சில தனிநபர்கள் செயல்பட விடாமல் தடுப்பதாக ஆடியோ பேசி அதை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியிருந்தார்.
பெண் ஊராட்சி மன்ற தலைவர் என்பதால் தன்னை செயல்பட விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தீ குளிப்பேன் என மாவட்ட கலெக்டருக்கு பேசி வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த ஆடியோவில், "நான் பெரியகாப்பாங்குளம் பெண் ஊராட்சி தலைவர் என்பதால் ஊராட்சியின் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பள்ளிகளுக்கு காம்பவுண்ட் சுவர் கட்டும்பணியை கட்சிக்காரர்கள்தான் செய்ய வேண்டும், உங்களுக்கு கையெழுத்து போடும் பணி மட்டுமே எனவும் மீறினால் ஏற்கனவே பி.கே.வீரட்டிகுப்பம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் குடிமராமத்து பணியை செய்ததற்கு ஊமங்கலம் காவல் நிலையத்தில் திருட்டுத்தனமாக மண் வெட்டியதாக வழக்கு பதிவு செய்தது போலவே காவல் துறைமூலம் வழக்கு பதிவு செய்வோம் என சிலர் விரட்டுகிறார்கள். இதனை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டதற்கும் எந்த பலனும், நடவடிக்கையும் இல்லை.
ஆதலால் கனம் பொருந்திய தாங்கள் இதுகுறித்து முறையான விசாரணை செய்து ஊராட்சியின் நிர்வாகத்தில் தனிநபர்கள் கட்சி பெயரை சொல்லி இடையூறு செய்யாவண்ணம் பெண் ஊராட்சி தலைவர்களை புரட்சி தலைவி அம்மாவின் வழியில் வந்த ஆட்சியை மதிக்கும் வகையில் பெண் ஊராட்சி தலைவர்கள் நிர்வாகத்தில் கணவர்கள் தலையீடு இல்லாமல் செயல்பட உத்தரவிட்டது போல, கட்சி பெயரை சொல்லி தனிநபர்கள் இடையூறு ஊராட்சி நிர்வாகத்தில் இல்லாமலிருக்க தக்க நடவடிக்கை எடுத்து உதவி செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் தீக்குளிப்பேன்'
என அழுது கொண்டே வாட்ஸப்பில் பேசி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இந்நிலையில் பெரியகாப்பான் குளம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி அரங்கநாதன், மற்றும் மணக்கொல்லை ஊராட்சி தலைவர் அமிர்தவல்லி வீராசாமி, பழையபட்டணம் ஊராட்சி தலைவர் மும்தாஜ் பேகம் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூயிரிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், "எங்களது ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகளில் அரசியல் காரணங்களுக்காக சில தனிநபர்கள் தலையிட்டு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெரியகாப்பான்குளம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சின்னகாப்பான்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பி.கே.வீரட்டிக்குப்பம் தொடக்கப்பள்ளி களில் ரூபாய் 14.42 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டுமான பணிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலர் அனுமதி அளித்தும் பணியை தொடங்க முடியவில்லை. பல்வேறு காரணங்களை கூறி சிலர் பணியை தடுத்து வருகின்றனர்" என குறிப்பிட்டுள்ளனர்.
பெண் ஊராட்சி தலைவர்கள் செயல்பாடுகளில் கணவர்கள் தலையிடக்கூடாது என உத்தரவு இருக்கும்போது கட்சியின் பெயராலும், அதிகார தோரணையிலும் மிரட்டுவதை அரசு அனுமதிக்கக்கூடாது. உடனடியாக அந்த ஊராட்சி தலைவரை விசாரித்து அவரை மிரட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்லர்களும், மக்களும் எதிர்பார்க்கின்றனர்.