சர்கார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167- வது படமாக உருவாகியுள்ள, இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், இவர்களுடன் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நகைச்சுவை நடிகர் யோகி பாபு, உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
விழாவில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், "ரஜினி நமக்கு கிடைத்த அதிசயம், அற்புதம் என புகழாரம். ரஜினியின் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு கருத்து இருக்கும்; அது தர்பாரிலும் இருக்கும் என நம்புகிறேன். அதிசயம், அற்புதம் இந்த இரண்டு வார்த்தையால் தமிழ்நாடே அதிர்ந்து விட்டது. பல காலமாக இருக்கும் வார்த்தை ஆனால் அவர் சொன்னவுடன் அதற்கு மதிப்பு கூடி விட்டது. அதிசயம், பொக்கிசம் ரஜினிதான். இந்த வயதில் ரஜினி ஏன் அரசியலுக்கு வருகிறார் என்று புரிந்துகொள்ள வேண்டும். ஒரு தலைவர் மட்டும் தான் நாகரிகம் இல்லாமல் பேசுகிறார்; அது நாட்டிற்கு நல்லதல்ல; நான் பேசியதற்கு ரஜினிகாந்த் என்னிடம் பேசாமல் போனாலும் எனக்கு கவலையில்லை. சிறு வயதில் கமல் போஸ்டரில் சாணி அடிப்பேன்; இருவரும் இப்போது இணைந்திருப்பதை பார்க்கும்போது ஏதோ மாற்றம் ஏற்படப்போகிறது என்று தோன்றுகிறது" என்றார்.