சேலம் அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள பெரிய சோரகையைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருக்கிறார். இவருடைய தம்பி வேலு தங்கமணி (33). இவரும் அக்கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவர் நங்கவள்ளியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) அன்று இரவு 8.30 மணியளவில், அவருடைய கடைக்கு வந்த இரண்டு இளைஞர்கள், திடீரென்று அரிவாளால் வேலு தங்கமணியை சரமாரியாக வெட்டினர். தலை உள்பட பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
சம்பவத்தின்போது கடையில் இருந்த பெண் ஊழியரும் அலறியடித்து ஓடிவிட்டார். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த வேலு தங்கமணியை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த தாரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு, தாக்குதல் நடத்திய இளைஞர்கள் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன.
வேலு தங்கமணியை வெட்டிய இருவரில் ஒருவர் நங்கவள்ளியைச் சேர்ந்த சதீஸ் (28) என்பது தெரிய வந்துள்ளது. இவர் மேச்சேரியில் உள்ள சிஸ்கால் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தை இருக்கிறது. வீடியோ பதிவில் சதீஸுடன் வந்த இன்னொரு இளைஞரின் உருவம் தெளிவாக இல்லாததால், உடனடியாக அவரைப்பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
இதையடுத்து சதீஸை தேடி அவருடைய வீட்டுக்கு காவல்துறையினர் விரைந்தனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. தலைமறைவாகிவிட்டார்.
தாக்குதலில் பலத்த காயம் அடைந்த வேலு தங்கமணி, எவரிடத்திலும் எந்த ஒரு வம்புதும்புக்கும் போக மாட்டார் என்பதும், தாக்குதல் நடத்திய இருவருக்கும் வேலு தங்கமணிக்கும் முன்விரோதம் இல்லை என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால் வேறு யாராவது அவரை தூண்டிவிட்டு வெட்டச் சொல்லி இருப்பார்களோ என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகரை வெட்டியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி, முன்னாள் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஜீவானந்தம் தலைமையில் அப்பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. திடீரென்று சாலை மறியலில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ஓமலூர் உள்கோட்ட டிஎஸ்பி மற்றும் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டோரை சமாதானப்படுத்தினர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதாக உறுதி அளித்தனர். அதன்பிறகு போராட்டக்காரர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இனால் அந்தப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே, தப்பி ஓட்டிய குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.