தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் நீண்ட விசாரணைக்குப் பின் தமிழக அரசிடம் தனது அறிக்கையைக் கொடுத்தது. அந்த அறிக்கையைத் தமிழக சட்டமன்றத்தில் வைத்த அரசு அதுதொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுத்து சிலரைத் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் இன்றளவும் போய் வருகின்ற நிலையில் இந்த ஆணையம் எடப்பாடி பழனிசாமி பற்றிக் கூறியுள்ள சில செய்திகள் தொடர்பாகப் பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணனிடம் நாம் கேள்வி எழுப்பினோம்.
நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " இந்த சம்பவத்தில் அவருக்குத் தார்மீக பொறுப்பு இருந்திருக்க வேண்டும். மனசாட்சி உள்ள அரசியல்வாதியாக இருந்தால் நடந்த சம்பவத்திற்கு நான் பொறுப்பேற்கிறேன் என்று கூறியிருப்பார். ராஜினாமா கூட செய்யத் தேவையில்லை. இந்த வார்த்தையையாவது கூறியிருக்கலாம். ஆனா நான் டிவிய பார்த்து தெரிஞ்சிகிட்டேன்னு சொன்னார். இது பச்சை பொய்யின்னு ஆணையத்தோட விசாரணையில தெரிஞ்சிடுச்சி. இதை ஒன்றும் அருணா ஜெகதீசன் சொல்லவில்லை.
எடப்பாடியிடம் வேலை பார்த்த தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் ஆணையத்தின் விசாரணையில் கூறியிருக்கிறார்கள். அவர் சுடச் சொன்னார் என்று ஆணையத்திடம் அவர்கள் சொல்லவில்லை, ஆனா நிமிஷத்துக்கு நிமிஷம் என்ன நடக்கிறது என்பதை அவருக்கு நாங்கள் சொல்லிக்கொண்டு இருந்தோம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் எடப்பாடி அம்பலப்பட்டு போயிட்டாரா? தான் பொய் சொல்லியதற்காகத் தமிழக மக்களிடம் முதலில் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுத்தால்தான் குறைந்தபட்சம் அரசு அதிகாரிகள் இன்னொரு முறை இந்த மாதிரியான தவற்றைச் செய்யும்போது யோசிப்பார்கள். தற்போது ஆணைய அறிக்கையின்படி சில காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. யார் மீது எடுக்கப்பட்டுள்ளது, கான்ஸ்டெபிள், இன்ஸ்பெக்டர், தாசில்தார் என இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் மீது யார் நடவடிக்கை எடுப்பார்கள், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது யார் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற கேள்விக்கு அரசிடம் பதில் இருக்கிறதா?
எடப்பாடியைப் பார்த்து இன்னமும் திமுக பயப்படுகிறது. நான் இதை உறுதியாகச் சொல்வேன். இல்லை என்றால் உதயநிதியை வைத்து இந்த விவகாரத்தில் எடப்பாடியை எதிர்த்து போராட்டம் செய்திருக்கலாமே? திமுக இதை ஏன் செய்ய மறுக்கிறது என்பதை அவர்கள் தான் சொல்லவேண்டும். திமுகவைத் தடுப்பது எது என அவர்கள்தான் வெளிப்படுத்த வேண்டும்.