சென்னை உயா்நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ரங்கராஜன் நரசிம்மன் கடந்த ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், ‘ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயிலின் உற்சவா் மற்றும் மூலவா் சிலைகள் மாயமாகி உள்ளன. மேலும், கோயிலின் பழங்காலப் பொருள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, உயா்நீதிமன்றம் விசாரணை செய்து வந்தது. விசாரணையின்போது, ஸ்ரீரங்கம் கோயிலில் சிலை திருடப்பட்டதா, பழைமையான பொருள்கள் சேதப்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன் அடிப்படையில், அப்போதைய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி ஏ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையில் போலீஸார் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். மேலும் இது தொடா்பான ஒரு அறிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினா், உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். இந்த அறிக்கையின் அடிப்படையில் உயா்நீதிமன்றம், ஸ்ரீரங்கம் கோயில் விவகாரம் குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா் விரிவான விசாரணை செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மையில் உத்தரவிட்டது.
6 போ் மீது வழக்கு: இதன் அடிப்படையில், இந்து அறநிலையத்துறை அதிகாரி உள்பட 6 போ் மீது 4 கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ்.மாதவனை நியமனம் செய்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி அபய்கங்சிங் உத்தரவிட்டார்.
ஶ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன், அர்ச்சகர்கள் முரளி பட்டர், நந்து பட்டர், சுந்தர் பட்டர் மற்றும் ஸ்தபதிகள் ஸ்வாமிநாதன், முத்தையா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை ஸ்ரீரங்கநாத ஸ்வாமி கோவில் சிலை திருட்டு சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரெங்கராஜன் நரசிம்மன் என்பவர் 2017ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி அன்பு தலைமையில் 30க்கு மேற்பட்ட அதிகாரிகள் இன்று ஸ்ரீரங்கம் கோவிலில் வழக்கு பதியப்பட்ட 6 நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
புதிதாக பொறுப்பேற்ற பின்பு முதன் முறையாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு விசாரணைக்கு வந்தவர் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஐஜி அன்பு, உயர் நீதிமன்றம் கொடுத்த அறிவுறித்தல் பெயரில் ரெங்கராஜன் நரசிம்மன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். இது குறித்து தற்போது தான் விசாரணையை துவங்கியிருக்கிறோம். அதன் ஒரு கட்டமாக தான் தற்போது ஸ்ரீரங்கம் கோவிலில் விசாரணை நடத்தி வருகிறோம். இது குறித்த முழுமையான விசாரணை முடிந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.