Skip to main content

விருத்தாசலம் அருகே 70 பவுன் தங்கநகைகள்,  ரூபாய் 3 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை! 

Published on 21/06/2020 | Edited on 21/06/2020

 

cuddalore district virudhachalam incident police investigation

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சின்னப்பரூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (40), அவரது வீட்டின் அருகே வசிப்பவர் தேவேந்திரன் (60). இவர்களது வீடு சின்னப்பரூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று (20/06/2020) இரவு இவர்களது குடும்பத்தினர் வீட்டின் முன்புறம் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

 

பின்பக்கம் ரயில்வே தண்டவாளம் என்பதால் அதனை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து பாலமுருகன் வீட்டில் இருந்த 60 பவுன் தங்கநகைகள், ரூபாய் இரண்டு லட்சம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்தனர். அதேபோல் தேவேந்திரன் வீட்டில் இருந்த 10 பவுன் தங்கநகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கப்பணத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இருவரின் வீட்டிலும் மொத்தம் 70 பவுன் நகைகள்,  ரூபாய் 3 லட்சம் ரொக்கப்பணம், 6 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். 

 

cuddalore district virudhachalam incident police investigation

 

இந்நிலையில் காலையில் எழுந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்  மங்கலம்பேட்டை காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையிலான போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். 

 

மேலும்  இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட்டார். அதனையடுத்து விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்பநாய்  அர்ஜுன் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. ஆனாலும் கொள்ளையர்கள் குறித்த உடனடி தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

 

cuddalore district virudhachalam incident police investigation

 

சின்னப்பரூர் கிராமத்தில் அருகருகே உள்ள வீடுகளில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்