ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் வகையில் கோல்டன் விசா வழங்கி வருகிறது. இதில் தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியல் துறை, திரைத் துறை, விளையாட்டுத் துறை உள்ளிட்ட பல துறைகள் உள்ளடங்கும். இந்த கோல்டன் விசாவைப் பெறுபவர்கள் 10 வருடங்களுக்கு அந்நாட்டின் குடிமகன்களாகக் கருதப்படுவர்.
இந்த கோல்டன் விசாவை இந்தியத் திரைத்துறையைச் சார்ந்த பல முன்னணி பிரபலங்கள் வாங்கியுள்ளார்கள். இந்தியில் ஷாருக்கான், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும், மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலரும், தமிழில் கமல்ஹாசன், விக்ரம், பார்த்திபன், சிம்பு, விஜய் சேதுபதி, யுவன் ஷங்கர் ராஜா, த்ரிஷா, ஆண்ட்ரியா, மீனா உள்ளிட்ட பலரும் பெற்றுள்ளார்கள்.
இந்நிலையில், ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இது தொடர்பாக பேசிய ரஜினி, “யு.ஏ.இ அரசாங்கத்திற்கு எனது நன்றி. பின்பு என்னுடைய நண்பர், லூலு குரூப் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் யூசப் அலி. அவர் இல்லாமல் இந்த கௌவரம் கிடைத்திருக்காது” என்றார். சமீபத்தில் யூசப் அலியுடன் ரஜினி சந்திக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் தற்போது த.சே.ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக லோகேஷ் கனகரஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவுள்ளார்.