Skip to main content

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி! 

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
tourist Allowed to bath in Courtallam waterfalls 

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாகக் கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இத்தகைய சூழலில் தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் கடந்த 17 ஆம் தேதி (17.05.2024) திருநெல்வேலியைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின் (வயது 17) தனது குடும்பத்தாருடன் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், அந்தச் சிறுவன் அடித்துச் செல்லப்பட்டார். மேலும், அவர் உட்பட 5 பேர் அந்த வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டனர். அதில், 4 பேரை அங்கிருந்தவர்கள் நல்வாய்ப்பாக மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், போலீசார் ஆகியோர் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான சிறுவன் அஷ்வினைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில், அருவியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிறுவன் அஸ்வின் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. உயிரிழந்த சிறுவன் அஸ்வின், நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி உயிர்நீத்த வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகள், அணை பகுதிகள் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் குளிக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டிருந்தார். இதனால் குற்றாலம் அருவிகளில் கடந்த 7 நாட்களாகக் கனமழை காரணமாக குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குற்றாலம் பழைய அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று (24.04.2024) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று ஐந்தருவி பகுதியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதான அருவியில் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தெருநாய்கள் கடித்து சிறுமி படுகாயம்!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Tenkasi District Achanputur 12th Street dog incident
மாதிரிப்படம்

தெருநாய்கள் கடித்ததில் சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் 12வது தெருவில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு எட்டு வயதில் மனிஷா என்ற மகள் உள்ளார். இந்தச் சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று (22.06.2024) காலை 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்ததில் சிறுமி மனிஷாவைக் கடித்துள்ளன.

இதனைக் கண்ட சிறுமியின் உறவினர் ஒருவர் சிறுமியை மீட்டுள்ளார். இருப்பினும் நாய் கடித்ததில் படுகாயமடைந்த மனிஷா தென்காசி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இப்பகுதியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். 

Next Story

“திருப்பதி செல்வோர் கவனத்திற்கு...” - தமிழக அரசு முக்கிய தகவல்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Attention of Thirupati pilgrims TN Govt Important announcement

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒரு நாள் சுற்றுலா திட்டமான, திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை சுற்றுலா செல்லலாம் எனத் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,“தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களில் அதிக அளவில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சுற்றுப்பயணம். திருப்பதி ஒரு நாள் சுற்றுலாவாகும். அதன்படி திருப்பதி சுற்றுலா செல்லும் பேருந்து, சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திலிருந்து தினசரி காலை 4.30 மணிக்குச் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்கின்றது. 

Attention of Thirupati pilgrims TN Govt Important announcement
கோப்புப்படம்

ஒவ்வொரு பேருந்திலும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி பணியில் ஈடுபடுவார். வழிகாட்டிகள் திருப்பதி சுற்றுலா பயணிகளுக்குத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுற்றுலா பயணத்திற்கான விளக்கங்களை அளிப்பார். சுற்றுலா பயணிகளுக்குக் காலை உணவு திருத்தணி ஓட்டல் தமிழ்நாடு உணவகத்தில் வழங்கப்படுகின்றது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு, திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கிய விரைவு தரிசன அனுமதிச் சீட்டின் மூலம் சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்த பின்னர் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் நபர் ஒருவருக்குத் திருப்பதி லட்டு ஒன்று வழங்கப்படுகின்றது. மேலும் மதிய உணவுக்குப்பின் திருச்சானுார் சென்று பத்மாவதி அம்மனை தரிசனம் செய்த பிறகு இரவு உணவு வழங்கப்பட்டு மீண்டும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சுற்றுலா பயணிகளைக் கொண்டு சேர்த்து திருப்பதி சுற்றுலா பயணம் முடிவு பெறுகின்றது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்யத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com இணையதள பக்கத்திலும், அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம். திருப்பதி சுற்றுலா குறித்த கூடுதல் விவரங்களைத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தொலைப்பேசி எண்களான 180042531111 (கட்டணமில்லா தொலைபேசி எண் - Toll free), 044-25333333 மற்றும் 044-25333444 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.