
சேலம் - சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சேலம் - சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது. விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டங்களை செயல்படுத்தும்போது போராட்டங்கள் நடைபெறலாம். எனவே, திட்டம் குறித்து மக்களுக்கும், விவசாயிகளுக்கும் புரியவைத்துவிட்டு, அவற்றைச் செயல்படுத்த வேண்டும்.
பாஜக தலைவர் அமித்ஷா வரும் 9-ம் தேதி சென்னையில் கட்சியினரை சந்தித்து, அவர்களது கோரிக்கைகளை கேட்க உள்ளார். தமிழின் பெருமையை அடையாளப்படுத்தி, அதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது மத்திய அரசு. தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக திறந்த மனதுடன் இருக்கிறது.
தமிழகத்தில் புதிய அரசியல் சூழல் நிலவுகிறது. இது, பாஜக வளர்ச்சியடைய சரியான தருணமாகும். தமிழக பாஜக தலைமையை மாற்றுவதற்கு எந்தவித தேவையும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.