தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாகக் கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (24.05.2024) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (24.05.2024) அதிகாலை காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை (25.05.2024) காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.
மேலும் இது புயலாக வலுவடைந்து பிறகு வடக்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்று வங்கதேசம் நோக்கி நகரும். அதன்படி மே 26 ஆம் தேதி வங்கதேசத்தின் சாகர் தீவு - கேபபுரா இடையே தீவிர புயலாக கரையைக் கடக்கும். அச்சமயத்தில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்” எனக் கனிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாளை புயாலாக வலுப்பெறும் பட்சத்தில் ஓமன் நாடு பரிந்துரை செய்யப்பட்ட ரேமல் எனப் பெயர் சூட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.