கரோனோ நோய் பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு நாளையோடு (மே-17) முடிய இருக்கிறது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது நாளை தெரிய வரும்.
இந்நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தையிலிருந்து வந்தவர்களால் கடலூர் மாவட்டத்தில் கரோனா நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் மளமளவென உயர்ந்தது. அதே வேகத்தில் கடந்த மூன்று நாட்களாக நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் கரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 416 ஆக இருந்த நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையிலிருந்த 84 பேர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலிருந்த 48 பேர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்த 36 பேர், சிதம்பரம் அரசு மருத்துவமனையிலிருந்த 30 பேர், திட்டக்குடி அரசு மருத்துவமனையிலிருந்த 16 பேர் என நேற்று வரை 250 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 214 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இன்று கடலூர் கிருஷ்ணா மருத்துவமனையில் இருந்த 50 பேர், சென்னையிலிருந்த ஒருவர் என 51 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதுவரை கடலூர் மாவட்டத்தில் 301 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். தற்போது மாவட்டத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை 115 ஆக குறைந்துள்ளது.
இன்னமும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 38 பேர், கிருஷ்ணா மருத்துவமனையில் 14 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேர், முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் ஒருவர், சென்னையில் ஒருவர் என 115 பேர் தனி வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்நிலையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 3,331 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 8,997 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டதில் 416 பேருக்கு கரோனா இருப்பதும், 8,476 பேருக்கு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இன்னும் 105 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள், கோயம்பேட்டிலிருந்து வந்தவர்கள், காவல்துறை பயிற்சிக்கு வந்தவர்கள் என கரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்த வேகத்தில் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதால் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட மக்களும் நிம்மதியடைந்துள்ளனர்..
“விரைவில் அனைவரும் குணமடைவார்கள் என்றும், புதிய தொற்றுகள் ஏற்படாமலிருக்க மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முக கவசம் அணிவது போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்” எனவும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவுறுத்தியுள்ளார்.