Skip to main content

லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள ஆடித் தபசு கோலாகலம்

Published on 28/07/2018 | Edited on 28/07/2018
adi



சைவம் பெரிதா வைணவம் பெரிதா என்று ஒரே மதத்தின் இரு பிரவினர்களிடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் கல்ப கோடி காலம் நிகழ்ந்து வந்தது. கலவரமாக வெடித்தது. முன்னே நடந்த கலவரத்தில் பலர் வெட்டியும் குத்தியும் மண்ணில் சரிந்தார்கள். ரத்த நதி பாய்ந்தது. எண்ணிலடங்காதவர்கள் கழுமரம் ஏற்றப்பட்டனர். பக்தர்களின் மோதலைத் தடுத்து அவர்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் பொருட்டு சிவபெருமானே தன் உடம்பில் பாதி அரியாகவும், மறுபாதியை சிவனாகவும் உள்ளடக்கி ஒரு சேர தோற்றத்தோடு பக்தர்களுக்கு காட்சியளித்தார். வைணவமும் சைவமும் ஒன்றே என்று உணர்த்த, பக்தர்கள் அமைதியானார்கள். விவகாரமும், மோதல்களும் முற்றுப்பெற்றன.

 

 

 

சிவபெருமானின் அந்த அரிய திருக்கோலத்தைத் தனக்கும் காட்டியருள வேண்டும் என்று எம்பெருமானிடம் அன்னை பார்வதி அம்மையும் வேண்டினார்.அதற்கு இணங்கிய சிவபெருமான் அம்மையை நோக்கி பூலோகத்தில் பொதிகை மலைச்சாரலில் உள்ள புன்னைவனத் தலமாகிய சங்கரநயினார் கோவில் பதியில் தவம் செய்து நீ விரும்பிய திருமேனியைத் தரிசிக்க என்று அருளினார்.
 

அதன்படி உமையம்மை தம்மைச்சூழ்ந்து பசுக்களாகி வந்த தேவமாதர்களுடன் கோமதியம்மை, ஆவுடையம்மை என்னும் காரணப் பெயர் தாங்கி தவம் இருந்தார். அம்மையின் தவத்திற்கிணங்க சிவபெருமான் ஆடித்திங்கள் உத்திராட நன்னாளில், அருள் தரும் கோமதியம்பிகைக்கு ஸ்ரீ சங்கர நாராயணராகக் காட்சி கொடுத்தருளினார். இதனையே தபசுக்காட்சி என்ற தொன்று தொட்டு வணங்கி வருகிறார்கள். இத்தகைய சிறப்பு மிக்க ஆடித்தபசு சங்கரநயினார் கோவிலில் நடந்ததாக வரலாறு பேசுகிறது.

 

 

 

பனிரெண்டு நாள் விழாவாக நடக்கும் ஆடித்தபசு விழாவான பதினோராம் நாளான ஜூலை 27 அன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள ஆடித்தபசுக்காட்சி நடந்தேறியது. அரகர மகாதேவா எனும் பக்திப் பரவசம் முழங்க பக்தர்கள் சிவபெருமானின் திருக்காட்சியைத் தரிசித்தனர்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்