உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. அதேசமயம் கரோனா தொற்று குறைவது போல் தெரிந்தாலும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பணியாற்றிவர்களுக்கு தொற்றிய கரோனா மீண்டும் பரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 29-ஆம் தேதி வரை கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 26 ஆகி சிவப்பு மண்டலத்தில் இருந்தது. மே 30-ஆம் தேதியோடு அவர்கள் அனைவரும் குணமடைந்து விடுகளுக்கு திரும்பினர். கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற வேண்டிய சூழலில் கடலூரிலிருந்து புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்த 68 வயது முதியவருக்கு தொற்று உறுதியாகி மீண்டும் கணக்கு தொடங்கியது.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய வேப்பூர் அடுத்த தொண்டங்குறிச்சி கிராமத்தை 2 பேருக்கு சென்னையிலேயே கரோனா பரிசோதனை செய்த நிலையில் அவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்ததால் அவர்கள் இருவரையும் அதிகாரிகள் கண்டு பிடித்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் அதேபோல் சென்னை கோயம்பேட்டிலிருந்து வந்த விளாங்காட்டூர், படுகளாநத்தத்தை சேர்ந்த 45 தொழிலாளர்கள் விருத்தாசலம் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த 45 பேரின் உமிழ்நீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் அவர்களில் 7 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானது.
இதனிடையே பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியிலிருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்ந்த மூதாட்டு ஒருவர்க்கும், அவருடன் இருந்த மகன், மருமகளுக்கும் கரோனா தொற்று உறுதியாகியது. அதையடுத்து அவர்கள் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. கரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகன் கடலூர் எம்.பி டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் வீட்டுக்கு கடந்த வாரம் சென்று வந்ததால் பண்ருட்டி போலீஸ் லைன் தெருவில் உள்ள எம்.பியின் வீடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜிப்மரில் உள்ள மூதாட்டியின் பேத்தியான 11 வயது சிறுமி மற்றும் கோயம்பேடு பகுதியிலிருந்து வந்த சிறுகிராமம் ஊராட்சியை சேர்ந்த 4 பேர், பாளையம் ஊராட்சியை சேர்ந்த 4 பேர் என இன்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே 26 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி குணமடைந்த நிலையில், புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை 22 ஆகி கடலூர் மாவட்டத்தின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 48 ஆக உள்ளது.
ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வந்த நிலையில், மே முதல் வாரத்திலிருந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருகிறது. மேலும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையிலிருந்து கிராமங்களுக்கு திரும்பிய சுமார் 600 பேர் தொழுதூர், வேப்பூர், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் உமிழ் நீர் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் எப்படி வருமோ என பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
இந்த மே முதல் வார முதல் வாரத்தில் சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலமாக மாறியுள்ள கடலூர் மாவட்டம் மீண்டும் சிவப்பு மண்டலமாக மாறிவிடுமோ… இதன் முடிவுகள் எப்படி இருக்குமோ என மாவட்ட நிர்வாகமும், மக்களும் பதற்றத்தில் உள்ளனர்.