சேலத்தில், பெண்களை ஆபாசப்படம் எடுத்து மிரட்டிய வழக்கில் சிக்கிய முக்கியக் கைதிக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், அவருக்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவருக்கும் நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், வழக்கு விசாரணையில் ஈடுபட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சேலம் தாதகாப்பட்டி சீரங்கன் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன். அவருடைய மனைவி ரூபா. வீட்டிலேயே அழகுநிலையம் நடத்தி வருகிறார். அழகுநிலையத்திற்கு வரும் ஆதரவற்ற பெண்களைப் பண ஆசை காட்டி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். ஒருகட்டத்தில், வாடிக்கையாளர்களுடன் நிர்வாண நிலையில் இருக்கும் பெண்களை ரகசியமாகக் காணொலிப்பதிவு செய்து வைத்துக்கொண்ட லோகநாதன், சில பெண்களை மிரட்டியே தனக்குத் தெரிந்த வி.ஐ.பி. வாடிக்கையாளர்களுக்கு இரையாக்கி உள்ளார். அவரும் பலமுறை அவர்களைப் பலவந்தப்படுத்தி வல்லுறவு செய்துள்ளார். இதற்கெல்லாம் அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.
லோகநாதன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் பிரதீப், சிவா ஆகியோர் நான்கு பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டி வந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரித்து வந்த சேலம் நகர அனைத்து மகளிர் காவல்துறையினர், கடந்த சில நாள்களுக்கு முன்பு மூவரையும் கைது செய்தனர். மனைவி ரூபா, தலைமறைவாகி விட்டார்.
கைதான மூவரில் லோகநாதனுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்தது. இதனால் அவரை கைது செய்ததிலும், விசாரணை நடத்தியதிலும் நெருக்கமாகச் செயல்பட்ட உதவி ஆணையர் ஈஸ்வரன், நகர காவல் ஆய்வாளர் குமார், மகளிர் காவல் ஆய்வாளர் பழனியம்மாள் மற்றும் அன்னதானப்பட்டி காவல்நிலைய காவலர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கும் நோய்த்தொற்று இருக்குமோ என்று பதற்றம் அடைந்தனர்.
இவர்கள் அனைவருக்கும் கடந்த இரு நாள்களாக கரோனா நோய்த்தொற்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அன்னதானப்பட்டி காவல் நிலைய காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்தான், முக்கியக் கைதியான லோகநாதனுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இதையடுத்து அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் அந்தக் காவலருடன் பணியாற்றி வந்த மற்ற காவலர்களும் கலக்கம் அடைந்துள்ளனர். இதையடுத்து நோய்த்தொற்று கண்டறியப்பட்ட காவலர், உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, கைதான லோகநாதன், ஊரடங்கு உத்தரவு காரணமாக எங்கும் வெளியே செல்லாமல் கடந்த இரு மாதங்களாக வீட்டிலேயே இருந்திருக்கிறார். அப்படி இருந்தும் அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதால், சேலத்தில் சமூகப்பரவல் கட்டத்தை எட்டி விட்டதோ என்ற அய்யமும் சுகாதாரத்துறை தரப்பில் எழுந்துள்ளது.
எனினும், சமூகப் பரவல் தொடர்பாக சுகாதாரத்துறையிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதுமில்லை.