தமிழக முழுவதும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 25 தேதி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களை தமிழ்நாடு முழுவதுமுள்ள 15 இடங்களில் ஆயுதப்படை மைதானங்களில் உடல்தகுதி தேர்வு நவம்பர் 6 தேதியில் தொடங்கி நவம்பர் 15 தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் 7.11.19 இன்று சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 900 பேர் உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டனர்.
அப்படி உடற்தகுதி தேர்வுக்கு வந்த இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசியபோது தமிழ் பேச தெரியாமல் ஒரு இளைஞர் இந்தி மொழியில் பேசியதால் சந்தேகம் அடைந்த இளைஞர்கள் அவருடைய ஆதார் அட்டையை கேட்டபோது அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்ததது. இதனால் மாணவர்கள் கொந்தளித்து நாங்களே வேலையில்லாமல் திண்டாடும் நிலையில் இவர் எப்படி உள்ளே வந்தார் என்று உடற்தகுதிக்கு வந்த இளைஞர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், எங்கு பிரச்சனை வெடித்து விடுமோ என்ற அச்சத்தில் உடற்தகுதி தேர்வின் பொறுப்பாளரான ஜாயிண்ட் கமிஷனர் ஜெபி.பாபு அந்த வட மாநிலத்தை சேர்ந்த இளைஞரை வெளியேற்றினார்.
அந்த மாணவன் எப்படி தேர்வுக்கு தகுதி ஆனார் , தேர்வு எப்படி எழுதியிருக்க முடியும் இதில் உயரதிகாரிகள் தொடர்பு இருக்க கூடுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது சென்னையில் மட்டும்தானா இல்லை ஒட்டுமொத்தமாகவே இந்த நிலைதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.