ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியதால் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக விநாடிக்கு 2300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாசனப்பகுதி விவசாயிகள் இந்நீரை பயன்படுத்தி நெல் பயிரிட்டுள்ளனர். வாய்க்காலில் 2300 கனஅடி நீர் இருகரைகளை தொட்டபடி செல்கிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் சத்தியமங்கலம் அடுத்துள்ள மில்மேடு பகுதியில் உள்ள சுள்ளித்தோட்டம் என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்காலின் இடதுபுற கரை திடீரென உடைந்து அதிலிருந்து வெளியேறிய தண்ணீர் அருகே உள்ள விவசாய விளைநிலங்களில் புகுந்தது.
இதைக்கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர். உடனடியாக இதுகுறித்து பவானிசாகர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தினர். இந்நிலையில் இந்த நீர் அப்பகுதியில் உள்ள சுள்ளித்தோட்டம், கேத்தம்பாளையம், சின்னபீளமேடு, தட்டாம்புதூர், சுண்டக்காம்பாளையம், நாகரணை கிராமங்களில் உள்ள விவசாய விளைநிலங்களில் புகுந்து தாழ்வான பகுதியில் உள்ள பள்ளங்கள் மற்றும் நீரோடைகள் வழியாக தண்ணீர் பவானி ஆற்றிற்கு சென்றது. 70 க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் அப்பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
மேலும் சத்தியமங்கலத்தில் இருந்து உக்கரம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் கேத்தம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் தண்ணீர் புகுந்ததால் பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. பள்ளியின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. கரை உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகள் வைத்து அடுக்கி உடைப்பை சரிசெய்வதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது.
கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்டதால் வெளியேறிய தண்ணீர் அப்பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. மேலும் தண்ணீர் செல்லும் பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் விழுந்ததால் நேற்றுமுன்தினம் மாலை முதல் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கரை உடைப்பு ஏற்பட்ட பகுதியை ஈரோடு கலெக்டர் கதிரவன் நேரில் ஆய்வு செய்து உடைப்பை சரி செய்வது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்.
கீழ்பவானி வாய்க்கால் கரையில் சுமார் 30 மீட்டர் நீளத்திற்கு கரை உடைப்பு ஏற்பட்டுள்ளது. கரை உடைந்து வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கியிருக்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 2 நாட்களில் கரை உடைப்பு சரி செய்யப்படும். இன்னும் சில மணி நேரத்தில் தண்ணீர் வடிந்துவிடும். பின்னர் மணல் மூட்டைகள் மற்றும் மூங்கில் கழிகளால் கரை உடைப்பு சரிசெய்யப்படும். வெள்ள பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் " என்றார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை வாய்காலின் கரை உடைந்தது இந்த கரை உடைப்புக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என பாசனப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வாய்க்காலில் தண்ணீர் திறப்பிற்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாய்க்காலின் இருபுறத்தில் உள்ள கரைகளை ஆய்வு செய்து மண்சரிந்துள்ள இடங்களில் கரையை பலப்படுத்திய பின்பு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாய்க்கால் கரை ஆய்வு செய்வதில்லை. ஆய்வு செய்தது போல் கணக்கு காட்டி விடுவார்கள். அணை கட்டப்பட்டு வாய்க்கால் வெட்டி 64 ஆண்டுகள் ஆகியும் இதுபோல் ஒருமுறை கூட கரை உடைப்பு ஏற்படவில்லை. அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாமல் உள்ளதால் இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டதாகவும் இனிமேலாவது கரைகளை ஆய்வு செய்து கரை சேதமடைந்த இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்சேதத்தை கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என பாசனப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.