Skip to main content

கைதிகள் மீது கை வைக்காதீங்க! ஐ.ஜி. பெரியய்யா அட்வைஸ்!!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

IG Periyayya

 

குற்றவாளிகளை கைது செய்யும்போது அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதுடன், கைதிகளைத் தாக்காமல் விசாரணை நடத்திட வேண்டும் என மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.


கோவை மேற்கு மண்டல காவல்துறை ஐஜி பெரியய்யா, சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் கடந்த இரண்டு நாள்களாக ஆலோசனை நடத்தினார். இது, அவ்வப்போது துறை ரீதியாக நடக்கும் வழக்கமான ஆலோசனை, ஆய்வுக் கூட்டம்தான் எனக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.


சேலம் மாவட்டம் ஓமலூரில் ஜூலை 7ஆம் தேதி காவல்துறை அதிகாரிகளுடன் ஐ.ஜி. பெரியய்யா ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். 

 

''தமிழகம் முழுவதும் கரோனா தடுப்புப் பணிகளில் ஒவ்வொரு காவலரும் கடமை உணர்வோடு பணியாற்றி வருகின்றனர். மக்களிடம் காவல்துறைக்கு நல்ல பெயர் கிடைத்த நிலையில், சாத்தான்குளம் சம்பவம் அப்பெயரை நீர்த்துப் போகச் செய்துவிட்டது. அதனால் கரோனா தடுப்புப் பணிகளில் முழு கவனத்துடன் மக்களிடம் நல்ல பெயர் எடுக்கும் வகையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிட வேண்டும். 


ஒவ்வொரு காவலரும் டென்ஷன் இன்றி, மக்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். சாலையில் வாகனத் தணிக்கை உள்ளிட்ட களப் பணியாற்றும்போது எவ்வித டென்ஷனையும் வாகன ஓட்டிகளிடம் காட்டக் கூடாது. பொறுமையாக விசாரித்து அனுப்பிட வேண்டும்.


கரோனா பரவும் இப்போதைய சூழலில் இரவு, பகல் பாராமல் பணியாற்றுகிறோம். அனைவருக்கும் நாம்தான் முன்மாதிரியாக இருக்க வேண்டும். காவலர்களின் குறைகளை அதிகாரிகள் கேட்டறிந்து, அதனைச் சரி செய்திட வேண்டும். 


குடும்பப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்தையும் கேட்டுத் தீர்வு கண்டு துணையாக இருக்க வேண்டும். அதேபோல் குற்றவாளிகளைக் கைது செய்யும்போது, அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். கைதிகளை எக்காரணம் கொண்டும் தாக்காமல் விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்த 24 மணி நேரத்திற்குள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் வராமல் பணியாற்றி, காவல்துறைக்கு நற்பெயரை பெற்றிட வேண்டும்'', என்றார் ஐஜி பெரியய்யா.

 

http://onelink.to/nknapp


சேலம் டி.ஐ.ஜி. பிரதீப்குமார், சேலம் மாவட்ட எஸ்.பி. தீபா கனிகர், கூடுதல் எஸ்.பி.-க்கள் அன்பு, சுரேஷ்குமார் மற்றும் அனைத்து டி.எஸ்.பி.-க்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்