திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மலையாம்பட்டு கல்லேரி பகுதியில் ஒரு கல்குவாரி சில ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இந்த கல்குவாரியால் எங்கள் பகுதி பாதிக்கப்படுகிறது எனச்சொல்லி கல்லேரி குடியிருப்பு பகுதியில் வாழும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
வெடிவெடிப்பதால் அந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு இடையூராக இந்த குவாரி இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி, அதிகாரிகளுக்கு குவாரி இயங்க தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில் மார்ச் 6ந்தேதி காலை குவாரியை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் குவாரி முன் போராட்டம் நடத்திய தகவல் போலீஸாருக்கு சென்று அவர்கள் வந்து எச்சரித்து அனுப்பிவைத்தனர். இந்த குவாரி பேர்ணாம்பட்டை சேர்ந்த திமுகவின் முன்னாள் ஒன்றிய பொருளாளர் காசி என்பவர் நடத்திவருகிறார் என்கின்றனர்.

திமுகவினரோ, குவாரி அமைந்தபின்பு தான் அங்கு குடியிருப்பாக 20 வீடுகள் உருவாகின. இப்போது இது குடியிருப்பு பகுதி எனச்சொல்லி குவாரியை மூடச்சொல்வது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்புபவர்கள், இதன் பின்னால் அதிமுகவை சேர்ந்த சிலர் உள்ளனர் என குற்றம்சாட்டுகின்றனர்.