தேனி மாவட்டம் கம்பத்தில் நேற்று மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு பட்டத்துக் காளைக்கு படையலிட்டு பொதுமக்கள் வழிபட்டனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடை அணிந்து வீட்டு வாசலில் புதுப்பானையில் பச்சரிசிப் பொங்கலிட்டனர். உற்றார் உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.
அதுபோல் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, விவசாயிகள் கால்நடைகளை அலங்கரித்து தொழுவத்தில் பொங்கலிட்டு வழிபட்டனர். அதுபோல் கம்பம் நந்தகோபாலன் கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட பட்டத்துக் காளைக்கு பொதுமக்கள் பொங்கலிட்டு கரும்பு, வாழைப் பழம் படையலிட்டு வழிபட்டனர்.
அவர்கள் வீட்டில், தை முதல் நாளில் ஈன்றெடுக்கும் கன்றுகளை, கோயிலுக்கு தானம் செய்வது வழக்கம். ஒரு பிரிவினர் மட்டுமே தொடர்ந்த இப்பழக்கத்தை, நாளடைவில் அனைவரும் பின்பற்றத் தொடங்கினர். அந்தக் கன்றுகள், மாடுகளாய் மாறும் போது தெய்வமாய் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
தானம் செய்யும் கன்றுகள், தெய்வமாய் அவதாரம் எடுப்பதால், அதை அளிப்பவரின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.
கன்றுக் குட்டிகள், மண்ணால் செய்யப்பட்ட மாட்டு பொம்மைகளை கோயிலுக்கு நேர்த்திக் கடனாகச் செலுத்தினர். விழாவை முன்னிட்டு கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட கிராமஙகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.