இன்று நடந்த அ.தி.மு.க., மா.செ.க்கள், எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டம் மிகவும் பரபரப்பாக நடக்கும் என எதிர்பார்ப்பு கூடியிருந்த நிலையில் எந்த பரபரப்பும் இல்லாமல் கூட்டம் அமைதியாக முடிந்துவிட்டதாக கூறப்பட்டது. மொத்தமே ஒரு மணி நேரம் மட்டும் நடந்த இக்கூட்டத்தில் முதல்வர் துணை முதல்வர் மற்றும் மதுசூதனன் கேபி முனுசாமி வைத்தியலிங்கம் ஆகிய 5 பேர் தான் பேசியுள்ளார்கள். எந்த பரபரப்பும் உள்ளே நடக்கவில்லை என வெளியே கூறப்பட்டாலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேருக்கு நேராக பார்த்து அவர் பேசியது, இதுதான்
சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்சியின் சார்பாக வேட்பாளரை நிறுத்துவதற்கும் கட்சியில் அமைப்பு ரீதியாக செயல்பாடுகளைக் கொண்டு செல்வதற்கும் ஏற்கனவே நாம் பேசி முடிவு செய்தபடி 11 பேர் கொண்ட கமிட்டி போட வேண்டும் என்பதுதான். இப்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல், 22 சட்டமன்ற தேர்தலிலும் நாம் அந்த கமிட்டி அமைத்து பணியாற்றவில்லை. ஏன் கமிட்டி போடவில்லை? இதை முதல்வர் தான் விளக்க வேண்டும் என கடுகடுப்புடன் கூற இதற்கு எந்த பதிலும் கூறாமல் அமைதியாக அமர்ந்து உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஓ.பன்னீர்செல்வம் பேசி முடித்த பிறகும் ஏன் கமிட்டி போடவில்லை என்று எந்த வார்த்தையும் எடப்பாடி பழனிச்சாமி பேசாமல் தவிர்த்துவிட்டார். இந்தக் கூட்டத்தில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க இருவரும் சிரித்த முகத்தோடு இருந்தாலும் கூட்டம் முடியும் வரை இருவரிடமும் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருந்துள்ளது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் கடைசிவரை முகத்தை எடப்பாடி பக்கம் திருப்பாமலேயே இருந்துள்ளார் ஒருவகையில் மனம் விட்டுப் பேசி இருந்தால் ஒரு சுமூக நிலைமை ஏற்பட்டிருக்கும் என இக்கூட்டத்தில் கலந்துகொண்ட எம்எல்ஏக்கள் ஆதங்கத்தோடு கூறுகிறார்கள்.