
'கள்' ஒரு போதை பொருளல்ல அது உணவு பொருளை சார்ந்ததுதான் என விவசாயிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் நீண்ட காலமாக கள்ளுக்கான தடை நீடிக்கப்பட்டு வருகிறது. இந்த தடையை நீக்க வலியுறுத்தி விவசாயிகள் அரசை வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கத்தின் நிறுவனத் தலைவர் சதா நாடார் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் 21ந் தேதி ஈரோட்டையடுத்த திண்டலில் உள்ள தனியார் செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமாரும் சம்பவ இடத்துக்கு வந்தார். இந்தப் போராட்டத்தின் போது, ‘இந்திய அளவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே கள் இறக்க அனுமதி உள்ள நிலையில் தமிழகத்தில் கள்ளுக்கு உள்ள தடை நீக்க வேண்டும். இந்த தடை காரணமாக நாங்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகிறோம். தமிழக அரசு உடனடியாக தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்து கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.