சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேரணி சென்ற 10,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது காவல்துறை.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நேற்று (19/02/2020) சென்னையில் பேரணி நடந்தது. இந்த பேரணி கலைவாணர் அரங்கில் தொடங்கிய நிலையில் சேப்பாக்கத்தில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இஸ்லாமிய அமைப்புகள் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவால் பேரணியை சேப்பாக்கத்திலேயே முடித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தடையை மீறி பேரணி சென்றதாக 16 இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், 1500 பெண்கள் உட்பட 10,000 பேர் மீது திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.