கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோ.பூவனூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தினர் அனைவரும் விவசாயத்தை மட்டும் தங்களின் வாழ்வாதரமாக நம்பி வாழ்ந்து வருகின்றனர். இப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட பலராம ரெட்டி ஏரியின் நீர் ஆதாரத்தை கொண்டு சுமார் 100- ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் உள்ளன.
இந்த ஏரியின் கரையை பலப்படுத்துதல் மற்றும் 600 மீட்டர் வாய்க்கால் தூர் வாருதல், மதகுகள் சரி செய்தல் உள்ளிட்டவைகளுக்காக நடப்பு ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர் கரையை சரியான முறையில் பலப்படுத்தாமல் தொடர்மழையை காரணம்காட்டி வேலை முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இப்பருவமழையில் இப்பஞ்சாயத்துக்குட்பட்ட ஏரியில் எல்லாம் தண்ணீர் நிரம்பி விட்ட நிலையில், பாலராமரெட்டி ஏரி மட்டும் நீர்வரத்து இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தொடர் மழை பெய்துவரும் நிலையில் சரியான முறையில் தூர்வாராததால், ஏரியில் தண்ணீர் பிடிக்கவில்லை என்றும், தூர்வாரும் பணியில் பலலட்சம் ஊழல் நடந்திருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.