நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து, கேரளா, கர்நாடகா போன்ற 89 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அடுத்ததாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் நேற்று (07.05.2024) மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், “தேர்தல் பரப்புரையில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார். மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார். எனவே இது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே சமயம் இந்த வழக்கில் பிரதமர் பெயரை சேர்த்திருப்பதால் வழக்கை பட்டியலிட மறுப்பதாக காங்கிரஸ் வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மனுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் மனுத்தாக்கல் செய்ய நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.