கோயம்புத்தூர் மாவட்டம் பொன்னேகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிகிறார். அதே ஊரில் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் மாலதி என்பவர் தனது மகள் திருமணத்திற்காக 10 லட்சம் ரூபாய் பணத்தை அவரிடமிருந்து கடனாக வாங்கியுள்ளார். அவரிடமே மேலும் 10 லட்சம் ரூபாய் பணம் தனது மகனின் படிப்பிற்காக வேண்டும் என வாங்கியுள்ளார்.
அந்தப் பணத்தை விருப்பஓய்வு பெற்றதும், அதன் மூலம் வரும் பணத்திலிருந்து திருப்பி கொடுப்பேன் என்று மாலதி அவரிடம் வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால், வட்டியும் கொடுக்காமல் அசலையும் கொடுக்காமல் மாலதி தொடர்ந்து இழுத்தடித்த நிலையில், மாலதி திடீரென தலைமறைவாகிவிட்டார். இதனையறிந்த கார்த்திக் உடனே கோயம்புத்தூர் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
இதேபோல் தலைமை ஆசிரியர் மாலதி, பலரிடமும் சுமார் 50 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கிக்கொண்டு திருப்பித் தராமல் அவர்களின் நெருக்கடியால் தலைமறைவானது தெரியவந்தது. மேலும், பணம் கொடுத்து ஏமாற்றடைந்த வேறு சிலரும் புகார் அளித்துள்ள நிலையில், தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியர் மாலதியை கோவை குற்றப்பிரிவு போலீசார் இன்று (09.07.2021) கைதுசெய்தனர்.