அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தடையின்றி வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் வழங்க வேண்டும், வைரஸ் தொற்று காலத்தில் பணியாற்றும் ஊழியர்களை மருத்துவ குழு காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும், குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம், ஊக்கத்தொகை, இடைநில்லா பயண செலவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட வேண்டும், காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் எடையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து கொண்டு பணிபுரிந்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் தங்கராசு கூறுகையில், "கரோனா ஊரடங்கு தொடக்கத்திலிருந்தே நியாயவிலைக்கடை பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். தொடர்ந்து அரசு வழங்கும் நிவாரண நிதி மற்றும் இலவச அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வருகிறோம். ஆள் பற்றாக்குறை காரணமாக ஒரு பணியாளர் இரண்டு கடைகள் என பணியாற்றி வருகிறோம். இதனால் பணிச்சுமை கூடுகிறது. அதற்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
ஆள் பற்றாக்குறை உள்ள நியாயவிலைக் கடைகளில் உடனடியாக பணியாளர்கள், எடையாளர்களை நியமிக்க வேண்டும். இந்த கரோனா காலத்தில்கூட குடோனில் இருந்து வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுகிறது. இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட எங்களின் 20 அம்ச கோரிக்கைகளை உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று இன்று ஒருநாள் கருஞ்சட்டை அணிந்து பணியாற்றுகிறோம். எனவே உடனடியாக அரசு எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என்றார்.